சாமியார் பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுபவர்களைக் கண்டு, தான் கவலை கொள்வதாகவும், தந்தை பெரியாரை "அறிவார்ந்த தீவிரவாதி" என்றும் விமர்சித்துள்ளார்.
பாபா ராம்தேவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும், பெரியார், அம்பேத்கர் குறித்த தனது கருத்துக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
மேலும், ட்விட்டரில் பாபா ராம்தேவை கைது செய்யவும், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கக் கோரியும் ட்விட்டரில் #RamdevInsultsPeriyar, #ArrestRamdev, #ShutdownPatanjali என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியது.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து சாமியார் ராம்தேவின் சர்ச்சை பேச்சுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''வலதுசாரி சக்திகளால் பெரியார் மற்றும் எங்கள் சித்தாந்தத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
தந்தை பெரியார் அடித்தட்டு மக்களுக்காக, பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். தந்தை பெரியார் சாதிய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இதுபோன்ற அனைத்து ஒடுக்குமுறை சக்திகளுக்கும் எதிராக திராவிட சித்தாந்தத்தை தி.மு.க பாதுகாக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.