கண் துஞ்சாது, மெய்வருத்தம் பாராது, அல்லும் பகலும் அயராது வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக உழைத்து வெற்றியைத் தேடித்தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு.கழக வேட்பாளராக நின்ற எனக்கு, வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கும், என்னை இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்தது மட்டுமல்லாது எனது வெற்றிக்காக, பல முறை தொகுதிக்கு வந்து, சிரமம் பாராது பிரசாரம் செய்து, எனக்கு வெற்றியைத் தேடித் தந்த கழகத் தலைவர் என் பெருமதிப்பிற்குரிய தளபதி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல படப்பிடிப்பு பணிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, வேலூர் தொகுதிக்கு வந்து, இரவு-பகல் பராது கழக வேட்பாளரான எனக்கு பிரசாரம் செய்த, இளைஞர்களின் எழுச்சி நாயகன், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; ஆர்வத்தோடு, வேலூர் தொகுதிக்கு வந்து, எனது வெற்றிக்காக, பிரச்சாரம் செய்த - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து வந்து, தொகுதியிலேயே பல நாட்கள் தங்கி, தேர்தல் பணியாற்றிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் அவர்களோடு வந்த ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்களுக்கும் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளுக்கும் நன்றி.
தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் பணியில் முனைப்புக் காட்டி, சிறப்பாக பணியாற்றிய வேலூர் கிழக்கு, வேலூர் மத்திய, வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி, உட்கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் செயல்வீரர்கள் - தோழமைக் கட்சிச் செயலாளர்கள் மற்றும் தோழர்கள் மற்றும் பத்திரிகை, ஊடகத் துறையினர் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்கள் - வாக்களித்தாவர்கள் என்ற பேதம் பாராமல், அனைவரும் என் தொகுதி மக்கள் என்ற தாய்மை உணர்வோடு என்னால் முடிந்த அத்தனை பணிகளையும் செய்வேன் என்று வாக்காளர்களுக்கு நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.