17வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
அ.தி.மு.க.,வை விட தி.மு.க லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாட்டிலேயே 3வது பெரிய கட்சியாக உருவெடுத்து மகத்தான சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து மக்களைச் சந்தித்து வருகிறார்.
அப்போது, கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதிக்கு சென்ற பார்த்திபனுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வாக்குக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துமே அ.தி.மு.க.,வினர் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரிலேயே அ.தி.மு.க,.வால் ஜெயிக்க முடியவில்லை.
சேலத்தில் தி.மு.க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், குடிநீர் விநியோகத்தை நிறுத்தி மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகிறது எடப்பாடியின் அ.தி.மு.க அரசு. இதுதொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றால், “நீங்க தி.மு.க.,வுக்கு தான ஓட்டு போட்டீங்க, அவங்ககிட்டயே போய் கேளுங்க” என அலட்சியமாக பதிலளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தால், குடிநீர் விட வேண்டாம் என அ.தி.மு.க.,வினர் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்கின்றனர். இது மிகவும் கீழ்தரமான, மலிவான அரசியலில் ஈடுபடுவதையே குறிப்பிடுகிறது. மக்களுக்கான நீரை உடனடியாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், இந்த விவகாரம் தொடர்பாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து சேலத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று எஸ்.ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.