இந்திய திரை உலகின் நீங்கா குரலாக விளங்கியவர்களில் ஒருவர் திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலகெங்கிலும் ரசிகர்களின் மனதில் இன்றும் குடியிருந்து வருகிறார். “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...” என்ற பாடலுக்கு உண்மையான சொந்தக்காரர் என்றே எஸ்.பி.பி-யை கூறலாம்.
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் (2020) கொரோனா தொற்று நோயால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அதிலிருந்து மீண்ட பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.பி. வாழ்ந்த காம்தார் நகரை, 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் எஸ்.பி.பி.சரண், தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரணின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (செப்.25) எஸ்.பி.பி-யின் நினைவு தினத்தை முன்னிட்டு, காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு திரையுலகினர் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து வரும் நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் மகனான சரண், முதலமைச்சருக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள எஸ்.பி.பி.சரண், “அப்பாவின் இந்த நினைவு நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகம் சென்று ஒரு மனு கொடுத்திருந்தேன். காம்தார் நகரில் அப்பா வசித்த தெருவுக்கு அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போது மிக முக்கிய அலுவல் பணிகளில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
நான் கோரிக்கை வைத்து 36 மணி நேரத்துக்குள், அப்பாவின் நினைவு நாளன்றே, அவர் வசித்த வீடு உள்ள சாலைக்கு எஸ்.பி.பி சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த அருமையான தருணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாமிநாதன் என மொத்த அரசாங்கத்திற்கும் என் குடும்பத்தின் சார்பில் மிகுந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.