"விடுதலையைப் போன்றே காதல் என்பதும் புரட்சி தீ"
என்ற வசனத்தை வார்த்தையாக மட்டுமல்ல வாழ்க்கையாகவே படம் பிடித்து காட்டியிருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
அவர் இயற்றியிருக்கும் ஹீராமண்டி தொடர் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
கங்குபாய் காட்யவாடி, பாஜிராவ் மஸ்தானி, தேவதாஸ், பத்மமாவதி என இவர் கொடுத்திருக்கும் வெற்றி படங்கள் எண்ணற்றவை.
பெரும்பாலும் இவரது திரைப்படங்கள் உண்மை வரலாற்றை மையப்படுத்தியே இருக்கும். இந்த முறை பன்சாலி இயற்றியிருக்கும் ‘ஹீராமண்டி’ வெப் சீரிஸ்.
நாட்டின் விடுதலைக்கு வரலாற்றுப் புத்தகங்களில் பெயர் இருப்பவர்கள் மட்டுமின்றி முகம்தெரியாத எத்தனையோ பேரின் தியாகமும் அர்ப்பணிப்பும் இருந்துள்ளதை நினைவூட்டுகிறது.
இதில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, சஞ்சீதா ஷேக், ஷர்மின் சேகல் மேத்தா மற்றும் தாஜா ஷா பாதுஷா ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம், பாடல், என இவை மட்டும் இல்லாமல், இவர் திரையில் காமிக்கும் காட்சி, சூழல் என அனைத்தும் மிகவும் அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
ஹீராமண்டி (டைமென்ட் பஜார் ) : ஹீராமண்டி வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு கற்பனை தொடர். இந்த தொடர் கடந்த மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. கதை முற்றிலும் தவாய்ஃப்களின் வாழ்வியல் சூழலை சுற்றியே அமைகிறது. கதையின் கரு மற்றும் அழகியல் காண்போரை தவாய்ஃப்களின் காலத்துக்கே கொண்டு செல்கிறது.
தவாய்ஃப்கள் யார் என்று பலருக்கு சந்தேகம் எழலாம். தவாய்ஃப்கள் நவாப் காலங்களில் வாழ்ந்த நடன கலைஞர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் நடனம் மட்டும் அல்லாமல், இசை மற்றும் இலக்கியங்களிலும் சிறந்து விளங்கினர். அந்த காலகட்டத்தில் பெண்கள் படிப்பது என்பது மிகவும் அறியது. ஆனால் இவர்கள் படிப்பில் ஆர்வமாக செயல்பட்டனர். இந்த பெண்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்ததாகவும் அறிய முடிகிறது. இவர்களில் சொல்லுக்கு நவாப்கள் பலர் கட்டுப்பட்டார்கள். சில நேரங்களில் போருக்கு செல்லும் அரசர்க்கு தவாய்ஃப்களின் பொன்னும் பொருளும் பெரும் உதவியாக இருந்தது. தனித்து ஒரு முடிவு எடுக்கும் அளவிற்கு தவாய்ஃப்கள் சாதுர்யத்தோடு இருந்தனர்.
கதையின் தொடக்கத்தில் இரண்டு தவாய்ஃப்கள் இடையே நடக்கும் மோதலில் தொடங்கி, இறுதியில் அவர்களின் எதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது இந்த தொடர். அன்பு, கோவம், வன்மம், பழிவாங்கும் உணர்வு என பல உணர்ச்சிகளை உள்கொண்டது 'ஹீராமண்டி'. நவாப்களில் ஆசை பொருளாக இருந்த தவாய்ஃப்களின் உணர்வுகளை மிகவும் ஆழமாக காட்சி படுத்தி காட்டியுள்ளார் பன்சாலி. ஒரு தவாய்ஃப் காதல் வசப்பட்டால் அவளில் வாழ்வு எவ்வளவு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் என்பதனை இந்த தொடர் உணர்த்துகிறது.
தவாய்ஃப்கள் பல திறன்களை பெற்று இருந்தாலும் ஒரு சாமானிய பெண்ணாக அவர் வாழ்கை அமையாது என்பதனை ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்துகிறது. கலாச்சாரத்தாலும், சமூகத்தாலும் இவர்களின் வாழ்வு இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தங்க கூட்டில் வாழும் ஒரு பறவை போலவே இவர்களில் வாழ்க்கை நகர்கிறது.
அக்காலகட்டத்தில் ஆங்கிலேயே அரசுக்கு கீழ் நவாப்கள் இருந்தனர். சுகந்திரத்தை பற்றி அவர்கள் எந்த கவலையும் படவில்லை. பல நவாப்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. அந்த சூழலில் தவாய்ஃப்கள் சுதந்திரத்துக்கு போராடும் நபர்களுக்கு பொருள் கொடுத்து உதவி செய்தனர். பதுங்கிக் கொள்வதற்கு அவர்கள் மாளிகையில் இடம் கொடுத்தனர், தன்னலம் பாராமல் பல உதவிகளை மறைமுகமாக செய்தார்கள். சில தவாய்ஃப்கள் உயிர் தியாகம் செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலம் இவர்களின் தியாகத்தை பற்றி பேச மறந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
இந்த தொடர் லாகூரில் உள்ள தவாய்ஃப்களின் வாழ்வை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. ஏற்கனவே கூறியது போல இரண்டு தவாய்ஃப்களின் இடையில் நடக்கும் போட்டியே கதையின் ஆரம்பம், யார் தவாய்ஃப்களின் அடுத்த தலைவி என்பதே அந்த போட்டி. சில ஏற்ற தாழ்வும் மற்றும் கதையின் விறு விருப்பான நகர்வும் காண்போரின் கவனத்தை கவர்ந்து உள்ளது.
கதாபாத்திரங்கள் அனைத்தும் ஆழமானவை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் என தனி தனியே கதைகள் அமைந்துள்ளது என்றாலும் அது கதையின் ஓட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் இயக்குநர் பன்சாலி திரைக்கதையை வேகமாக அமைத்துள்ளார். இதுவே பார்ப்பவரின் ஆழ் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. ஹீராமண்டி என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பங்காக இருந்தது என்பதை இந்த சீரிஸ் மூலம் அறிய முடிகிறது.
“பாலியல் தொழிலாளி மரணிப்பதில்லை விடுதலை அடைகிறாள்”, “மனைவி என்பவள் நிஜம், காதலி என்பவள் ஆசை, பாலியல் தொழிலாளி என்பவள் பலருது விருப்பம்”, என்ற வசனங்கள் எல்லோருயையும் ஈர்க்கிறது.
- நா. காயதிரி தேவி.