டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஜெய் பீம்’.
இப்படம் இருளர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும், ராஜாக்கண்ணு என்பவருக்கு போலிஸாரால் நேர்ந்த கொடுமைகள் குறித்தும், அவரது மனைவிக்காக முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்ட உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்ற ‘ஜெய் பீம் படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் பட்டியலிலும் இடம்பெற்றது. மேலும் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் இப்படத்தின் ஒரு பகுதி திரையிடப்பட்டது.
இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய விருது ஜெய் பீம் படத்திற்குக் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெய்பீம் படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம் மக்கள் மத்தியில் மத பாகுபாட்டை விதைக்கும் வகையில் வெளிவந்த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட, "இலங்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்படி பலரும் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுப்பார்கள்? என காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.