தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. 2010-ல் லீடர் படத்தின் மூலம் அறிமுகமான ராணா, தந்து 2-ம் படமே இந்தியில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த இவர், 2013-ல் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் அஜித்துக்கு நண்பராக நடித்து தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், 2015-ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் மேலும் பிரபலமானார். தொடர்ந்து அந்த படம் இவருக்கு மாபெரும் ஹிட் கொடுக்கவே அதன் 2-ம் பாகத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், பெரும்பாலும் தெலுங்கு படங்களிலே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆப் கோதா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழு மட்டுமின்றி நானி, ராணா டகுபதி உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்களும் பங்கேற்றனர். அப்போது மேடையில் அவர்கள் படத்தை பற்றியும், துல்கரை பற்றியும் புகழ்ந்து பேசினர்.
அந்த சமயத்தில் பேசிய ராணா, துல்கரின் இந்தி படத்தின் நிகழ்வுகளை பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், "துல்கர் சல்மான் இந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் ஷூட்டிங் எனது வீட்டு அருகே தான் நடந்தது. அதனால் நான் துல்கரை சந்திக்க சென்றேன். அந்த சமயத்தில் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகி போனில் ஷாப்பிங் குறித்து பேசி கொண்டிருந்தார்.
அதோடு அவரது டயலாக் சிலவற்றை சரியாக கூறவில்லை. இதனால் பல டேக்குகள் எடுக்கப்பட்டன. அப்போது துல்கர் கோபப்படாமல் மிகவும் பொறுமையாக அதில் எடுக்கப்பட்ட அனைத்து டேக்குகளுக்கும் நடித்து கொடுத்தார். " என்று புகழ்ந்தார். இவரது பேச்சு துல்கர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அது ஒரு கும்பல் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியது.
ஏனெனில் ராணா அந்த படத்தின் பெயரையும், நடிகையின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், துல்கர் நடித்த இந்தி படம் 2019-ல் வெளியான 'The Zoya Factor' படம் என்பதை ரசிகர்கள் அறிந்துகொண்டனர். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். எனவே ராணா, சோனம் கபூரை சாடுவதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதற்கு ராணா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது கருத்துகளால் சோனம் கபூர் மீது ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை எண்ணம், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நண்பர்களாக நாம் அடிக்கடி விளையாட்டுத்தனமான கேலிகளைப் பரிமாறிக்கொள்கிறோம். அதுபோல நான் அதனைச் சாதாரணமாகத்தான் சொன்னேன்.
ஆனால் எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டன. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் மிகவும் மதிக்கும் சோனம் மற்றும் துல்கர் இருவரிடமும் எனது உளப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளக்கம் அனைத்து யூகங்களுக்கும் தவறான புரிதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.