'அண்ணன் கண்ணுலயே பேசுவன்டா' எனும் பருத்திவீரன் பட வசனத்துக்கு சரியாக பொருந்தக்கூடிய மலையாள நடிகர். கோலிவுட் ரசிகர்களால் தற்போது நடிப்பு அரக்கன் என்று செல்லமாக அழைக்கப்படும் ஃபகத் ஃபாசிலின் பிறந்த நாள் இன்று.
காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, வருஷம் 16 போன்ற படங்களின் இயக்குநரான ஃபாசிலின் மகனான ஃபகத், 2002 ஆம் ஆண்டு கையேதும் தூரத் எனும் மலையாளத் திரைபடத்தி்ல் அறிமுகமானார். தொடர்ந்து மகேஷிண்ட ப்ரதிகாரம், பெங்களுர் டேஸ், அன்னயும் ரசூலும், டேக் ஆஃப், மாலிக், கும்பளங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், ஜோஜி போன்ற படங்களில் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தி, வெற்றிப் படங்களின் மூலமாக பாலிவுட், கோலிவுட் வட்டாரங்களிலும் மிகச் சிறந்த நடிகராக சினிமா ரசிகர்களுக்கு மத்தியிலும் பேசப்பட்டு வருகிறார்.
மலையாளப்படங்களை தொடர்ந்து தற்போது கோலிவுட் படங்களிலும் கோலோச்சி வருகிறார் ஃபகத். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன், தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் புஷ்பா படத்திலும் நடத்திருக்கிறார். தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்படும் மாமன்னனிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
6 பிலிம் பேர், 3 கேரள திரைப்பட விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது என 19 விருதுகளுக்கு சொந்தக்காரர் ஃபகத். ஃபகத்தின் நடிப்பை கொண்டாடுவது அவரது திறமைக்கு மரியாதை. அவரது வில்லன் பாத்திரங்களை கொண்டாடுவது ஃபகத்துக்கு இழைக்கும் அவமரியாதை. ஃபகத்தின் பிறந்தநாளில் அவரது திறனுக்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுவோம்.
கும்பளங்கி நைட்ஸ் படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு டையலாக்கில் "ஷம்மி ஹீரோடா.." என்பார். வில்லானாக நடிக்கும் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மாற்றும் தன்மை கொண்டவர்.
- திலீப் பிரசாத்