தமிழில் துணை நடிகராக வலம் வந்தவர் பிரபு. சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், 2009-ல் வெளியான தனுஷின் ‘படிக்காதவன்’ படம் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அந்த படத்தில் தனுஷின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். இவருக்கு தனுஷ் காபி கொண்டு வருவார்.
இதையடுத்து சில படங்களில் அவ்வப்போது தோன்றி வந்த இவருக்கு பிறகு நடிக்க வாய்ப்புகள் எதுவும் இன்றி இருந்துள்ளார். குறிப்பாக கொரோனா காலத்துக்கு பிறகு இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. மேலும் இவரது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனிடையே தான் போதைக்கு அடிமையான இவர் மது, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால் இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதயடுத்து இவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேகொண்டதில் கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இப்படி ஒரு சூழலில் இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். புற்றுநோய் காரணமாக ஆள் அடையாளம் தெரியாமல் உடல் மெலிந்து காணப்பட்ட பிரபுவை, ஒருமுறை எதேர்ச்சையாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த பழனி என்பவர் அடையாளம் கண்டுள்ளார்.
அப்போது தனது நிலைமையை எடுத்து கூறிய பிரபுவுக்கு, பழனி தன்னால் முடிந்ததை செய்து வந்துள்ளார். தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமானுக்கு இவரை பற்றி தெரியவரவே, இவரது மருத்துவ செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தும் அது பலனளிக்காமல் புற்றுநோயின் 4-வது கட்டத்தில் இருந்த பிரபு நேற்று உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் நேரில் சென்று இறுதிச் சடங்குகள் செய்து உடலை தகனம் செய்தார். டி.இமானின் இந்த செயல் ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருவதோடு, மறைந்த துணை நடிகர் பிரபுவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.