இந்திய சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்து வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேபோல் பாலிவுட் சினிமாவின் நட்சத்திரம் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சன். இவரும் பாலிவுட் சினிமாவின் முகாமாக இருக்கிறார். இவருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதிக்குக் கடந்த 2011ம் ஆண்டு ஆராதாய என்ற மகள் பிறந்தார்.
இந்நிலையில் குழந்தை ஆராதாயா குறித்து யூடியூப் சேனல்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதயாவிற்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அடுத்து ஆராதாயா மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு குழந்தை குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டம் ஒருபோதும் அதனை அனுமதிக்காது. சாமானியரின் குழந்தையாக இருந்தாலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் ஒரேமாதிரி மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.
ஆராத்யா தொடர்பான தகவல்களை வெளியிடத் தடைவிதித்து, யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒன்பது யூடியூப் சேனல்களுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.