தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அருண்விஜய். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர், 1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து இயற்கை, தவம், ஜனனம், வேதா என சிறு சிறு தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஆண்டுக்கு ஒரு படம் என நடித்து வந்த இவர், 2015-ல் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.
விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிய தொடங்கியது. மேலும் இவருக்கு அந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து அதன்பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரு ஒரு படங்கள் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழில் நடித்து வரும் இவரது நடிப்பில் வெளியான 'குற்றம் 23', 'செக்க சிவந்த வானம்', 'தடம்' உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் 'யானை'. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதன்பிறகு தமிழ் ராக்கர்ஸ் என்ற சீரிஸும் வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து படங்களில் தற்போது நடித்து வரும் இவர், அறிவழகன் இயக்கத்தில் 'பார்டர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
பார்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமான இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்து வந்த அருண் விஜய் தவறி கீழே விழுந்ததால் அவரது காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு வலி குறையவில்லை.
எனவே கேரளாவில் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், "எனது காயம்பட்ட முழங்காலுக்கு பாரம்பரிய ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது 4வது நாள் சிகிச்சையில் தற்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்.. விரைவில் படப்பிடிப்புக்கு வருவேன்.." என்று குறிப்பிட்டுள்ளார்.