தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமா ஒரு புறம் இருக்க, காதலும் ஒரு புறம் இருந்தது. பல ஆண்டுகளாக இவரும் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவும், காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
சுமூகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man 2' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலில் நடித்ததன் மூலமாக இளைஞர்களின் மனதை மேலும் கொள்ளைக்கொண்டார். அதோடு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெற்றியை தொடர்ந்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தனது தனிப்பாதையில் மூவிஸ், சீரிஸ் என நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது நடிப்பில் வரும் நவம்பர் 11-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள 'யசோதா' திரைப்படம் டப்பிங்கின் போது தனக்கு மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே பிரச்னை (autoimmune disorder) உள்ளதாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதோடு தான் இதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அந்த நோய்க்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதனால் மேல் சிகிச்சைக்காக தென்கொரியா செல்லப்போவதாகவும் செய்திகள் வெளியானது. உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். அந்த வகையில் தான் கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து விலகுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியில் வெளியான 'The Family Man 2' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான இவர், சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக உடல்நிலை மோசமானதன் காரணமாக தற்போது அதில் இருந்து விலகவுள்ளார். தனது உடல் நலத்தில் முழு கவனம் செலுத்தி ஓய்வெடுக்கவுள்ளார்.
தற்போது சமந்தாவும், விஜய் தேவரக்கொண்டாவும் நடிக்கும் 'குஷி' படம் 60% நிறைவுற்றதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தேவரக்கொண்டா தெரிவித்திருந்தார். அதன்படி குஷி படத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் படத்தில் இருந்து சிறிது காலம் விலகி ஓய்வு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.