இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் இந்தாண்டு வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். சென்னையிலுள்ள பிரபல மால்-ஐ தீவிரவாதிகள் கைப்பற்றி, மற்றொரு தீவிரவாதியை விடுவிக்கும்படி ப்ளாக் மெயில் பண்ணுகிறார்; அவர்களிடம் இருந்து அந்த மக்களை நம் ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
இதில் வரும் தீவிரவாதிகளில் ஒருவராக வருபவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. முன்னதாக மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கும் இவர், பீஸ்ட் படத்தின் மூலமே தமிழ்நாட்டில் பிரபலமானார். மேலும் விமர்சன ரீதியாக பீஸ்ட் படம் தோல்வியை தொடர்ந்து இவர் அளித்த பேட்டி ஒன்றில், மலையாளத்தில் வில்லன், ஹீரோ என்று நடித்திருந்த தன்னை இதில் டம்மியாக காட்டியதாக குற்றம்சாட்டினார்.
இதனால் இவருக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் தனது கருத்துக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பாரத சர்க்கஸ்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக துபாய் சென்று விட்டு கடந்த 10-ம் தேதி 'AI 934 Dreamliner' விமானத்தில் மூலம் கொச்சிக்கு திரும்பினர்.
அப்போது விமானத்தில் இருந்த சாக்கோ, விமானிகள் அறை என அழைக்கப்படும் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை தடுத்தும் மீண்டும் நுழைய முயன்றுள்ளார். இதனால் விமான ஊழியர்கள் அவரை இறக்கி விட்டுள்ளனர். மேலும் அவரை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவருடன் பயணித்த படத்தின் இயக்குநர் கூறுகையில், "ஷைன் விமானி அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சிக்கவில்லை. அந்த அறையின் கதவை வெளியேறுவதற்கான கதவு என்று தவறாகப் புரிந்துகொண்டார்" என்றார்.
பின்னர் அவர் அடுத்த விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குடிபோதையில் விமானத்தில் தகராறு செய்து மலையாள நடிகர் ஒருவர் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.