தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. 1997-ம் ஆண்டு 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான இவர், காலப்போக்கில் தனது அசத்திய நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். பெண்களுக்கு ஒரு சாக்லேட் பாயாக தெரிந்த இவர், இப்போதும் பெண்களுக்கு பிடித்த ஒரு நடிகராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' 'நந்தா' இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைய தயாரானார்.
அதன்படி 'வணங்கான்' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிட்டனர். எனவே இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. அப்போதே பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாகவும், இதனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி கொள்ள போவதாக தகவல்கள் வெளியானது.
பின்னர் அவர்கள் சமாதானமாகி மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணமாக காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து 'வணங்கான்' படத்தின் கதையை, பாலா புதியதாக மாற்றுவதாகவும், அவருக்கு உதவியாக 'அருவி' படத்தை இயக்கிய அருண் புருஷோத்தமன் இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இருவரும் கலந்து பேசி முடிவெடுத்துள்ளதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் ட்வீட் ஒன்று செய்துள்ளது. அதில் "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யாவும், 2D Entertainment நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளது.
இது தற்போது தமிழ் திரையுலகில் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இணையவுள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இந்த செய்தி அவர்களுக்கு பெரும் வருத்தமளிக்க கூடியதாக அமைந்துள்ளது.