அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் அப்பாஸ், தான் தற்போது நலமாக உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் 90ஸ்-களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் நடிகர் அப்பாஸ். 1996-ம் ஆண்டு தமிழில் வெளியான 'காதல் தேசம்' படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
கொல்கத்தாவில் பிறந்த இவர் தமிழ் மொழி படங்களில் அறிமுகமாகி படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தார்.
"பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்.." என்ற பாடல் நடிகை சினேகாவுக்கு மட்டுமின்றி அப்பாஸுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இவருக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர்.
தமிழ் மொழியிலேயே பிரதான படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக 2009-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான 'குரு என் ஆளு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகும் தமிழில் 'ராமானுஜன்' என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் இவர் திரைத்துறையை விட்டு விலகி வெளிநாடு சென்றார்.
அங்கே சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். தனது சமூக வலைதளங்கள் மூலம் தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு ஒரு விபத்து நேர்ந்ததாகவும், அதனால் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் 'வாக் ஸ்டிக்' வைத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, "எனது அறுவை சிகிச்சைக்காக நாளை புறப்படுகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து ரசிகர்கள் நண்பர்கள் பலரும் இவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டுமென கமெண்ட்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது தனக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து நடிகர் அப்பாஸ் மீண்டும் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "மருத்துவமனையில் இருக்கும்போது எனது கவலைகள் மிக மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நான் அங்கு இருந்தபோது நான் சில பயங்களை சமாளிக்க முயற்சித்தேன். நான் என் மனதை மேம்படுத்த முன்றேன். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. விரைவில் வீடு திரும்பஉள்ளேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.