தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ் சினிமாவில் நீங்கா வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த லவ் டுடே படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இயக்கி அவரே காதநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் இவருடன் சேர்ந்து இவானா, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
இன்றைய தலைமுறையின் காதல் பற்றி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அவரது பாணியில் புது கண்ணோட்டத்துடன் இயக்கியுள்ளார். நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதை அழகாக நகரும் இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்கில் வெளியானது. குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே வெளியான இப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல ரிவியூ கொடுத்ததால், அடுத்தடுத்து திரை ரசிகர்கள் இப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டாக பார்த்து வருவதால், குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த இப்படத்தை பல திரையரங்குகள் வாங்கி திரையிட்டனர். தற்போது வரை 600 ஸ்கிரீனில் திரையிடப்பட்டு வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மொத்தம் ரூ.6 கோடி வசூலித்தது; தமிழ்நாடு அளவில் ரூ.4 கோடி வசூல் செய்தது.
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்கு பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்திருந்தார். இதில் "நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கடந்த காலங்களில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட சில பதிவுகள் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றிபுள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," என் பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.
ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கை நீக்கிவிட்டேன். விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.
சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம். அதை சரிசெய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.