சமீபத்தில் வெளியான கன்னடப் படம், காந்தாரா!
ரிஷப் ஷெட்டி நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகியிருக்கும் இப்படம் அதன் திரையாக்கத்துக்காக நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கிறார். வரவேற்பைப் பெறும் திரையாக்கத்தை இப்படம் கொண்டிருப்பதற்கு அடிப்படை அக்கதைதான். காட்டோரத்தில் பழங்குடி நம்பிக்கைகளுடன் இருக்கும் ஒரு கிராமம். அங்கு வாழும் நாயகன் பழங்குடி தெய்வத்தின் சாமியாடி குடும்பம். அவனது தம்பிதான் தற்போதைய சாமியாடி. அவனுடைய தந்தை சாமியாடியாக இருந்தவர் காட்டுக்கு சென்று மறைந்துவிட்டார்.
கிராமத்துக்கு என ஒரு வாய்மொழிக் கதை இருக்கிறது. காட்டுக்குள் வசித்த அவர்களின் கடவுளை சமவெளி ஆண்ட மன்னன் கேட்டுப் பெற்று பதிலுக்கு நிலத்தை அளித்தான் என ஒரு கதை. பிறகு காலம் மாறிப் போய், 1970களில் அரச பரம்பரையில் வந்த நிலப்பிரபுக்களின் வழிதோன்றல் நிலத்தை ரியல் எஸ்டேட் போடக் கேட்கிறான். மக்கள் மறுக்கிறார்கள். சாமியாடும்போது கேட்கிறான். சாமியும் மறுக்கிறது. பிறகு ரத்தம் கக்கி இறந்து போகிறான்.
இந்தப் பின்னணியில்தான் தற்காலக் கதை நடக்கிறது. நிலத்தைப் பொதுவாக வைத்து வாழும் பழங்குடிகள், நிலப்பிரபு, காட்டிலிருந்து பழங்குடியை அகற்ற விரும்பும் அரசின் வன இலாகா அலுவலர் என மூன்று முனைகளுக்கு இடையே கதை நகர்கிறது. கிட்டத்தட்ட கதை என்னவாக முடியுமென்பதை நீங்கள் யூகித்திருக்க முடியும். அவ்வாறாகவே படம் முடிகிறது.
ஒரு தொன்மக் கதையையும் தற்காலப் பிரச்சினையும் இணைக்க முயன்றிருக்கிறார்கள். தொன்மக் கதை படத்துக்கு தேவையான அமானுஷ்யத்தையும் இறுதி வெடிப்புக்கான முத்தாய்ப்பையும் சரியாகக் கட்டமைத்துக் கொண்டே வருகிறது. இறுதிச் சண்டையில் நாயகனே வீழ்ந்தாலும் ‘இல்லை, இன்னும் இருக்கிறது’ என ஒரு வகை சூரசம்ஹாரம் அல்லது ருத்ரத் தாண்டவத்தை எதிர்பார்க்கும் அளவுக்கான திரைக்கதை நெய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் தொன்மக் கதைகள் பல வந்திருக்கின்றன. ‘கர்ணன்’ படத்தில் சகோதரியை தெய்வமாக்குவது போன்ற காட்சிகள் வந்திருக்கின்றன. சின்னத்தாயி என்கிற படம் சிறு தெய்வ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது. சமீபத்திய கடைசி விவசாயி படமும் கூட அத்தகைய தன்மையை தன் களத்தில் கொண்டிருந்த கதையாக இருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்து முக்கியமான இடத்தில் இப்படம் மாறியிருக்கிறது. இப்படத்தின் அரசியல்! தமிழ்ச்சூழலில் வெளியானப் படங்கள் யாவும் கொண்டிருந்த தெய்வ வழிபாடு என்பது பார்ப்பனியத்துக்கு மாற்றானதாகவும் இந்து மதத்துக்கும் முந்தையதாகவும் தமிழர் வழிபாடென தனியாக இருந்ததை நிறுவதாகவும் அமைந்திருந்தன. ஆனால் கந்தாரா படம், பழங்குடி வழிபாட்டை பார்ப்பனியத்துடன் இணைக்கும் வேலையைச் செய்கிறது.
படத்தில் வரும் பழங்குடி மக்களின் தொன்மக்கதைப்படி, அரசன் காணும் தெய்வம் ஒரு கல்தான். அக்கல்லை காட்டு தெய்வமாக பாவித்து பழங்குடியினர் வழிபட்டதாக தொன்மக் கதை விரிகிறது. சமகாலத்தை கதை அடைகிறபோது அந்த தெய்வம் விஷ்ணு அவதாரமான வராகமூர்த்தி என வடிவம் மாறுகிறது. பழங்குடி நாயகனின் பெயர் ஷிவாவாக இருக்கிறது.
எருமை மாடு வளர்ப்பு, பன்றிக்கறி உண்ணுதல், சாமியாடுதல் முதலிய பார்ப்பனிய இந்து மதத்துக்கு எதிரான திராவிட வழிபாடு படம் முழுக்க காண்பிக்கப்படுகிறது. இறுதியில் அவற்றை சூலாயுதம் கொண்டும் விஷ்ணு அவதாரம் எனச் சுட்டியும் வெற்றிகரமாக பார்ப்பனியத்துடன் இணைக்கும் முயற்சி வெளிப்படுகிறது.
இந்த அரசியலுக்குக் காரணம், இயக்குநரின் அரசியல் தெளிவின்மை காரணமாக இருக்கலாம். அல்லது அரசியல் தெளிவு காரணமாக இருக்கலாம். லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டுமெனக் கேட்ட மரபு கொண்ட கர்நாடகத்தில், பார்ப்பனியத்திடமிருந்து வேறுபடுத்தும் முனைப்புக்காகவே செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட வரலாறு இருக்கும் நிலத்தில், பார்ப்பனியத்துக்கு எதிரான வழிபாடு, அதற்கான அரசியல் யாவும் நிச்சயமாக இருக்கிறது. இயக்குநர் அவை எதையும் எடுக்காமல், முற்றிலும் அதற்கு எதிரான திசையில் பார்ப்பனியத்துடன் ஐக்கியமாக்கும் அரசியலை முன்னெடுத்திருப்பதுதான் படத்தின் ஆகப்பெரும் சிக்கல்.
கர்நாடகாவின் பூதகோலம் போன்ற பாரம்பரிய பழங்குடி நடனங்கள் பார்ப்பனமயமாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்படும் பின்னணியில், அதே விஷயத்தை முன்னிறுத்தி வெளியாகி இருக்கும் இப்படம் ரசனையை தூண்டுவதைக் காட்டிலும் சந்தேகத்தை தூண்டுவதாக மட்டுமே அமைந்திருக்கிறது.