ஆங்கிலப் படமான Forrest Gump-ன் நாயகி ஜென்னி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சுவாரஸ்யம் நிறைந்த கதாபாத்திரம்.
ஜென்னியிடம் தன்முனைப்பு அதிகமாக இருக்கும்.
தகப்பன் சரி இல்லாதவனாக இருப்பான். சிதைந்த பால்யம்தான் வாய்த்திருக்கும். அவள் எப்போதும் கனவு காணும் ஒரு பறவையை போல பறந்து எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற விடுபடல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
விடுபட்டு எங்கு செல்வது? விடுபட்டாலும் எங்காவது செல்ல வேண்டுமே! அப்படித்தானே பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.
விடுபடல் என்பது ஒட்டுமொத்தத்தில் இருந்துமான விடுபடல். அப்படி விடுபட்டால் மொத்தத்துக்கு நடுவில் இருந்தாலும் உங்களால் விடுதலையாக இருக்க முடியும். விழிப்புணர்வு அற்ற விடுபடல் கொண்டால், யாருமற்ற பாலைவனத்தில் அமர்ந்திருந்தாலும் விடுதலையை அனுபவிக்க முடியாது.
ஜென்னி கனவு காணும் பறவை வாழ்க்கை உயர பறக்கும் வரை மட்டும்தான் அழகு. பூமிக்கு வந்துவிட்டால் பிரச்சினைகள்தான். உயரப் பறந்து திரிந்து வாழுதலுக்கு முழுமையான அகவிடுதலை கிடைக்க வேண்டும். அதற்கு கவனமான ஆய்வும் முழு விழிப்புணர்வும் கொண்டிருக்க வேண்டும். இவை ஏதும் இல்லையெனில், விடுதலை உணர்வை மட்டும் மனம் வேண்டும். விடுதலையே கிடைத்தாலும் அதில் மனம் லயிக்காது. அதிலிருந்தும் விடுபட தோன்றும்.
ஜென்னி அப்படித்தான். அவளுக்கு நேரும் பால்யகால பிரச்சினை, மனமுதிர்வு, அறிவு வளர்ச்சி ஏற்படும் முன்னமே தீர்வுகளை தேட வைக்கிறது. Forrest-ஐ கண்டு இரங்குகிறாள். அவன் கை பிடித்து தன் மார்பை தொட்டுக்காட்டி, அவனது பாலுணர்வை விழிப்படைய செய்கிறாள். ஆனால் காதல் கொள்ள மறுக்கிறாள். சில நாட்களில் வேறொருவனுடன் காரில் புணர்ந்து கொண்டிருக்கிறாள். பாட விரும்புகிறாள். நிர்வாண க்ளப்பில் பாடுகிறாள்.
ராணுவம் சென்று திரும்பும் Forrest மீண்டும் ஜென்னியை ஒரு கிளர்ச்சிக் குழுவில் பார்க்கிறான். அங்கு ஒரு abusive ஆணை எந்தவித காரணமும் இன்றி துணையாக பெற்றிருக்கிறாள். Forrest- ன் முன்னமே அந்த ஆண் ஜென்னியை அடிக்கிறான். ஆனாலும் அவனையே அவள் தொடர்கிறாள். Forrest-ஐ புறக்கணிக்கிறாள். காரணம் கேட்கையில் Forrest-ஐ எங்கே காயப்படுத்தி விடுவாளோ என்ற பயத்தில்தான் நெருங்க தயங்குவதாக சொல்கிறாள். மீண்டும் காணாமல் போகிறாள்.
தன் ஆதரவற்ற பால்யத்தின் விளைவால், ஒரு நிலையான மரம் தேடும் கொடியாகவே ஜென்னி அலைகிறாள். Forrest மட்டும் அவளுக்காக காத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளும் வருகிறாள். கொண்ட காதல் தாளாது சில நாள் கழிக்கிறாள். மீண்டும் காணாமல் போகிறாள். Forrest அவளை தேடி கண்டுபிடிக்கிறான். தன் குழந்தையை கண்டு கண்ணீர் துளிர்க்கிறான். வீட்டுக்கு கொண்டு வந்து ஊரறிய மணம் முடிக்கிறான். ஜென்னி விரும்பிய அந்த நிலையான வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் அதை அனுபவிக்கும் நிலைப்பு அவளுக்கு இல்லாமல் இறந்துவிடுகிறாள். குழந்தையுடனும் ஜென்னியின் நினைவுடனும் மிச்சக் காலத்தை Forrest கழிக்கிறான்.
இன்றும் பல ஜென்னிகள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கின்றனர். தன்முனைப்பை மட்டுமே கொண்டு நிலையற்ற மனநிலையில் தக்கை ஆன்மாக்களாக சுற்றி திரிகின்றனர். ஜென்னிக்கு பால்யம் நிலையற்ற பதற்றத்தை கொடுத்ததென்றால் நமக்கு தாராளமயமும் தனிமனிதவாதமும் நிலையற்ற பதற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பற்றியேற மரங்கள் தேடும் கொடிகள் போல் மாறி மாறி தாவிக் கொண்டே தொலைந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி, தனக்குள் வாழும் Forrest போன்றோர் படத் துவக்கத்தில் காற்றில் மிதந்து வரும் இறகை போல் மிதந்து வாழ்கின்றனர்.
உண்மையில் ஜென்னிகள் கனவு காணும் வாழ்க்கை கொண்ட பறவைகள் Forrestகள்தான். அதை புரிந்துகொள்ளும் போதுதான் பாவம், ஜென்னிகள் முடிந்து போய் விடுகிறார்கள்!