1. ‘சென்னை மாப்பிள்ளை’ மேக்ஸ்வெல்லுக்கு விசில்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த வினி ராமனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் “சென்னை மாப்பிள்ளை ஆகிவிட்டார் மேக்ஸி.. திருமண வாழ்த்துகள்.. உங்களது புதிய பார்ட்னர்ஷிப்பில் அதிக மேக்ஸிம்களை விளாச விசிலடிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
2. ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
நேற்று மும்பையில் டெல்லி கேப்பிடல்ஸிடம் மும்பை இந்தியன்ஸ் தனது தொடக்க ஆட்டத்தை இழந்ததை அடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததற்கு நடப்பு ஐபிஎல் தொடரில் ஓவர்-ரேட் பெனால்டியாக ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மும்பை அணி 18.2 ஓவர்களை மட்டுமே வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஓய்வா? - மிதாலி ராஜ் பதில்!
தனது ஓய்வு குறித்து இப்போது பதிலளிக்க முடியாது. அதைப் பற்றி நான் பிறகு பேசுகிறேன் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கேப்டன் மிதாலி. அப்போது அவரிடம் ஓய்வு குறித்து சில செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
4. “டைவ் அடிச்சு.. டைவ் அடிச்சு..!”
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசிஸ், “ சிறு வித்தியாசத்தில் வெற்றி பறிபோயுள்ளது. தொடக்கத்திலும், மிடில் ஓவர்களிலும் ஓரளவிற்கு பவுலிங் நன்றாக வீசினோம். ஆனால் அதன்பின் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பவுலர்களுக்கு கடினமானது.என்னால் முடியவில்லை, மிகவும் சோர்ந்துவிட்டேன். ஒவ்வொரு பந்தையும் தடுக்க டைவ் அடித்து டைவ் அடித்து கை மூட்டுப்பகுதி ஓய்ந்துவிட்டது. சற்று கவலையாகத்தான் இருக்கிறது.” என்று கூறினார்.
5. பி.வி.சிந்துவிற்கு விராட் கோலி வாழ்த்து!
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"சுவிட்சர்லாந்து ஓபன் தொடரில் பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள். தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருங்கள்" என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.