சினிமா

“குதிரையும் இல்லை.. வாலும் இல்லை.. ‘குதிரைவால்’ படம் பேசும் அரசியல் இதுதான்” : சினிமா விமர்சனம்!

மனிதனை அவனிடமிருந்தே அந்நியப்படுத்தும் வாழ்க்கையை உருவாக்கிய அரசியலைப் பேசாமல் கிணற்றில் குதித்து நீலியாவதே தீர்வு எனப் போதிப்பது கலை அல்ல, கயமை!

“குதிரையும் இல்லை.. வாலும் இல்லை.. ‘குதிரைவால்’ படம் பேசும் அரசியல் இதுதான்” : சினிமா விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

குதிரைவால் படம் புரியாததுதான் பிரச்சினையா?

அப்படியெல்லாம் இல்லை. படம் புரிகிறது. தெளிவாகவேப் புரிகிறது. அதுதான் பிரச்சினை.

ஒரு காலை எழும்போது நாயகனுக்கு குதிரை வால் முளைத்திருக்கிறது. அதற்கான காரணத்தை தேட முயலுவதாக கதை நகர்கிறது.

முந்தைய நாள் என்ன நடந்ததென யோசிக்கிறான். வங்கி ஊழியரான அவன் பணி கொடுக்கும் அலுப்பில் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் வேலையை விட்டு அனுப்பப்படுகிறான். பிறகு பக்கத்து வீட்டுக்காரரான சேத்தனை சந்திக்கிறான். ‘தனிமையில் வாழ்வதன் கொடுமையை’ அவர் விளக்குகிறார். பிறகு மறைந்து விடுகிறார். வீட்டுக்கு வரும் வங்கி ஊழியரைப் பார்த்து, ‘அமெரிக்கக் கைக்கூலியே... உன் ஸ்தாபனம் என்னைச் சுரண்டுது’ என நாயகன் கம்யூனிச வார்த்தைகள் பேசுகிறான். அடுத்ததாக நாயகனுக்கு ஒரு கனவு வந்தது நினைவுக்கு வருகிறது.

ஒரு மலையடிவாரத்தில் வாலில்லாமல் நிற்கும் ஒரு குதிரைக் கனவு. அக்கனவுக்கு அர்த்தம் என்னவென தேடத் தொடங்குகிறான் நாயகன் ஒரு மந்திரக்காரப் பாட்டியிடம் சென்று கேட்கிறான். பிறகு ஒரு கணக்கு பாடம் நடத்தி புத்தி பேதலித்த வாத்தியாரிடம் சென்று கேட்கிறான். பிறகு ஒரு ஜோசியக்காரரிடம் சென்று கேட்கிறான். ‘குதிரை என்றால் பெண். பெண் என்றால் குதிரை’ என்ற வழக்கமான ஆணாதிக்க சிந்தனையை தடவிக் கொடுக்கும் வசனங்களினூடாக நாயகன் தனக்கான அர்த்தத்தைத் தேடுகிறான். திடுமென எம்.ஜி.ஆர் பிம்பத்தை ரசித்தவர்களைத் தேடிச் செல்கிறான். அர்த்தம் கிட்டவில்லை.

வீட்டில் ஒரு நீலி அல்லது யஷி அல்லது தேவதை தோன்றுகிறாள். நாயகனின் குழப்பத்துக்கானக் காரணத்தை அவனது பால்யகாலத்தில் இருப்பதாகச் சுட்டுகிறாள். உடனே ஒரு மலைக்கிராமத்தில் அவனது பால்யம் விரிகிறது.

கிராமத்தில் ஒரு பெண் திருமணமாகாமல் கருவுற்று பிறகு அக்கரு சிதைந்து அவள் நீலியாகி விடுவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. பிறகொரு செய்தியை ஊர்மக்கள் வானொலியில் கேட்கின்றனர். எம்.ஜி.ஆர் செத்துவிட்டார் எனச் செய்தி.

எம்.ஜி.ஆர் சாவாரா அல்லது அது பொய்ச் செய்தியா என ஊருக்குள் குழப்பம். சிறுமியும் நாயகச் சிறுவனும் கிணற்றில் சென்று பார்க்கின்றனர். அங்கு எம்.ஜி.ஆரின் தொப்பியும் கண்ணாடியும் மிதக்கிறது. சிறுமியும் அதே போல் கிணற்றுக்குள் சென்று நீலியாகலாம் என விருப்பம் தெரிவிக்கிறாள். நாயகச் சிறுவனும் சம்மதிக்கிறான். நாள் குறிக்கின்றனர். அந்த நாளும் வருகிறது. அந்த நாளன்று அவன் வரவில்லை. சிறுமி இறந்துவிடுகிறாள். அந்த மரணம்தான் ‘விட்ட குறை, தொட்ட குறை’யாக நீண்டு தன் வாழ்க்கையில் வெறுமையை அளித்திருப்பதாக உணர்கிறான் நாயகன்.

இவற்றுக்கிடையில் பக்கத்து வீட்டுக்காரர் சேத்தனை நாயகன் கொன்றிருக்கும் தகவல் அவரின் மரணத்தை துப்பறியும் ஒரு நிபுணரின் வழியாக நமக்குச் சொல்லப்படுகிறது. இறுதியில் கனவின் வழியாக பால்ய காலத்தை வாழச் செல்கிறான் நாயகன். சிறுமி குறிப்பிட்ட அந்த நாளன்று சிறுவன் கிணற்றுக்குச் செல்கிறான். அங்கு சிறுமி காத்திருக்கிறாள். இருவரும் குதிக்கத் தயாராக நிற்கின்றனர். பிறகு பறவைகளாகி வானை நோக்கிப் பறந்து விடுகின்றனர்.

இதுதான் படம்.

இதைத்தான் ஓர் உலக மகா திரைப்படம் எடுத்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது படக்குழு.

படத்தின் ப்ரிவ்யூ காட்சியிடலின்போதே நிறைய வாக்குவாதங்கள் நேர்ந்தன. 'குதிரைவால் படத்தின் அரசியல் சிக்கலாக இருக்கிறது’, ‘அரசியலைப் புறந்தள்ளும் பின்நவீனத்துவப் படம்’, ‘பெண்ணை குதிரையெனக் கொச்சையாக பேசும் படம்’, ‘Meta கருத்தாடல்களைப் புறந்தள்ளும் சிறந்தப் படம்’, ‘வெட்டிச் செலவு’, ‘திறமையுடன் காத்திருக்கும் பல சினிமா இளைஞர்களின் வாய்ப்புகளை வீணடித்திருக்கும் படம்’, ‘இந்த மாதிரி வாழ்க்கையுடன் என்னால் எளிதாக கனெக்ட் ஆக முடிகிறது. இப்படத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு’, ‘ஏன் இவ்வளவு குழப்பமா படம் எடுத்திருக்கீங்க’ என்பன போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

எழுத்தாளரோ ‘இல்ல, தெரியல’, ‘நான் எழுதும்போது அப்படி எழுதல’, ‘அந்த ஐடியாவுல அதைச் சொல்லல’, ‘நீங்க சொல்றது புரியல’ போன்ற பதில்களை அளித்துக் கொண்டிருந்தார். இயக்குநர்களில் ஒருவரான மனோஜ் லயனல் ஜேசன் ஓர் உலக சினிமாவை ஏன் இந்த ஜனம் விமர்சிக்கிறது எனக் கடும் கோபம். ‘ஏன் புரியல’, ‘என்ன குழப்பம்’, ’இதுகூடவா புரியல’, ‘சினிமான்னா என்ன தெரியுமா?’, ‘என்ன வாய்ப்பை வீணடிச்சோம்’ ‘எங்களுக்குத் திறமை இருக்கு’ ’பின்நவீனத்துவம்னா?’ என்றெல்லாம் பேசிக் களமாடிக் கொண்டிருந்தார் அவர்.

உச்சக்கட்டமாக ‘பெண், குதிரை’ வசன ஒப்பீடு பற்றியக் குற்றச்சாட்டுக்கு படக்குழுவில் இருந்த ஒரு பெண்ணை வைத்து (Tokenism) பதில் சொல்லி தப்பித்துக் கொள்ளும் அரசியல் புரிதலுடன்தான் குழு இருந்தது.

போகட்டும்!

படத்தில் குழப்பமெல்லாம் இல்லை. சுற்றி விடுகிறார்கள். அவ்வளவுதான்.

‘இந்த கொடுமையைச் சொல்லத்தான் இத்தனையா’ எனப் பார்வையாளன் எட்டும் இடத்தில் பகடையைச் சுற்றிப் போட்டு வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு சொல்லப்படும் விஷயத்தில் ‘ஓஹோ.. இதை சொல்றதுக்குதான் இந்த சுத்தா’ என்ற இடத்தை அடைகையில் மீண்டும் ஒரு சுற்று. இப்படி தொடர்சுற்றுகள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு விளக்கம், ஒவ்வொரு வியாக்கியானம்.

திரும்பத் திரும்பச் சுற்றி விட்டு மக்களை ஏமாற்ற முனைவதுதான் படக்குழு செய்யும் வேலை. தமிழ் சினிமாப் பார்வையாளர்களை மட்டமான ரசனை கொண்டிருப்பவர்களாக படக்குழு நினைப்பதே பட விமர்சனங்களை அவர்கள் அணுகும் விதம் காட்டுகிறது. கிட்டத்தட்ட படமும் அதுவாகத்தான் இருக்கிறது. முழுக்க முழுக்க elite நாற்றம்!

படத்தின் மிக முக்கியமான பிரச்சினை அதன் அரசியல்!

நவதாராளவாத வாழ்க்கை கொடுக்கும் தொடர் ஓட்டம், உறவின்மை, வெறுமை, தனிமை, பொருளாதார அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புவது, இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொருவரின் ஏக்கம், ஆசை, தணியா வேட்கை. ஆனால் அந்த விடுதலையை அரசியலில் தேடாமல் தனக்குள் தேடிக், காணாமல் போகச் சொல்கிறது படம்!

வங்கி அலுவலரிடம் பேசும்போது ‘ஸ்தாபனம்’, ‘அமெரிக்கக் கைக்கூலி’ என்கிற வார்த்தைகளை அழுத்தமாகவும் திரும்பத் திரும்பக் பேச வைத்தும் நாயகனை இடதுசாரித்தன்மைக்கு மிக நெருக்கமாகச் சித்தரிக்கிறது படம். ஆனால் அவன் மனப்பேதலிப்புக் கொண்டவனாகவும் கொலை செய்தவனாகவும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவனாகவும் புரிதலற்றவனாகவும் தப்பித்துச் செல்ல விரும்புபவனாகவும் காட்டுவதன் மூலம் என்ன செய்தியைக் கடத்த விரும்புகிறது இப்படம்?

முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற இரு பெருங்கதையாடல்களை (Meta Narrative) நிராகரித்து, எளிமையான, கையாளக்கூடிய எதிரிகளை உருவாக்க முதலாளித்துவம் உருவாக்கிய கலை மற்றும் தத்துவ வடிவமே பின்நவீனத்துவம்!

‘பின்நவீனத்துவம் என்பது உண்மையில் மார்க்சியத்துக்கு முந்தையப் போக்கு’ என்பார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. எனவே பின்நவீனத்துவ கலை வடிவத்துடன் அதன் கருத்தியலையும் ஏற்று முன் வைப்பவர்கள் ஒருவகையில் மார்க்சியத்தின் முந்தையக் காலத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் பணிக்கான விதைகளை போடுவதாகத்தான் கொள்ள முடியும். எல்லாரையும் மிக எளிதாக கருத்துநிலைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அடிமைப்படுத்தி, ஒருங்கிணைய விடாமல் பிரித்து, சுரண்ட முடிவதுதான் மார்க்சியத்துக்கு முந்தையப் போக்கு.

பொருளாதாரம்தான் இன்றைய மனிதனுக்கு பெருமளவில் மனதைக் கட்டமைக்கிறது. ‘நவீன மனிதன் தன்னை ஒரு பண்டமாக ஆக்கிக் கொண்டான்’ என்பார் சமூக தத்துவவியலாளர் எரிக் ஃப்ராம். தனக்கிருக்கும் ஆற்றலை அதிக வருமானம் ஈட்டுவதற்கான முதலீடாக அவன் பயன்படுத்துகிறான். தன்னிடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்து இயற்கையிடமிருந்து அவன் அந்நியமாகிறான். தன் ஆற்றலை விற்று வருமானம் ஈட்டும் நல்ல ஒரு கொடுக்கல் வாங்கலைத் தாண்டி அவனுக்கு பெரிய நோக்கம் இல்லாத சூழலையே சமூகம் கொடுக்கிறது.

மனிதனை அவனிடமிருந்தே அந்நியப்படுத்தும் வாழ்க்கையை உருவாக்கிய அரசியலைப் பேசாமல் கிணற்றில் குதித்து நீலியாவதே தீர்வு எனப் போதிப்பது கலை அல்ல, கயமை!

அந்நியமாதல் பிரச்சினையை சாப்ளின் எடுத்த ‘மாடர்ன் டைம்ஸ்’ஸில் காண முடியும். அந்நியமாதலின் அரசியலைப் புரிந்ததால்தான் அவர் படத்தில் சிகப்புக் கொடி தூக்கி வரும் தொழிலாளர் போராட்டத்தைக் குறியீடாக வைத்திருப்பார். அத்தனை துயரத்தையும் தாண்டி ஒரு நல்ல எதிர்காலம் விடியும் என்கிற நம்பிக்கையையும் இறுதியில் விதைத்திருப்பார்.

ஒருவேளை சாப்ளின் கம்யூனிசத்துக்கு எதிராக இருந்திருந்தால் பின்நவீனத்துவ அரசியலைக் கொண்டாடும் வகையில் ‘Post Modern Times' எடுத்து அந்நியமாதலுக்குத் தீர்வு நீலியாவது என முடித்திருப்பார்.

‘குதிரைவால்’ படத்தின் அரசியல்தான் ஆபத்து!

வாலாக படத்தின் அரசியல் இருந்தும் குதிரையாக இயக்குநர் ரஞ்சித் அதைத் தயாரிக்க வந்ததன் காரணம்தான் புரியவில்லை, ஒன்றைத் தவிர!

banner

Related Stories

Related Stories