உலக அளவில் உள்ள சினிமா துறையினர் அனைவருக்குமான உயரிய விருதாக இருப்பது ஆஸ்கர். ஹாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி படங்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது விழா நடத்தப்பட்டு 94வது ஆண்டை எட்டியுள்ளது.
அதன்படி மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் விருது விழா நடக்கவிருக்கிறது. இதற்காக படங்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்தியா சார்பில் சூர்யாவின் ஜெய் பீம் படமும், மோகன்லாலின் மரைக்காயர் படமும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் இவ்விரு படங்களும் ஆஸ்கர் திரையிடலுக்கான இறுதி பட்டியலுக்கு சென்றது அண்மையில் தெரியவந்தது.
இந்த தகவல் சூர்யா ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. இப்படி இருக்கையில், நியூயார்க் டைம்ஸின் பத்திரிகையாளரான Kyle Buchanan ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் ஜாக்குலினிடம் ட்விட்டரில் ஆஸ்கர் நாமினேஷன் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, ஜெய்பீம் சிறந்த படமாக அறிவிக்கப்படும் என்னை நம்புங்கள் என ஹேஷ்டேக் இட்டு ஜாக்குலின் பதிலளித்திருந்தார். அதற்கு கீழே பிரபல ஹாலிவுட் நிரூபரான Scott Feinberg ‘ஜெய் பீம்’ நிச்சயம் ஆஸ்கரில் திரையிடப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்கள் காட்டுத்தீயாய் பரவி சூர்யா ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களிடையேவும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜாக்குலினின் கூற்றுப்படி ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெற்றால் அதுவே மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆஸ்கரின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய் பீம் படத்தின் பெயர் தேர்வாகவில்லை. இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேபோல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் தேர்வாகவில்லை.