சினிமா

“கணவனின் மரணத்திற்கு வருந்தாத மனைவி..” : ‘Pagglait’ திரைப்படம் எப்படி இருக்கிறது?

ஒருசேர நவீனத்துக்கும் பழமைக்கும் இடையே ஊசலாடும் ஒரு அசல் நவபார்ப்பன குடும்பமாக படத்தில் வரும் குடும்பம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

“கணவனின் மரணத்திற்கு வருந்தாத மனைவி..” : ‘Pagglait’ திரைப்படம் எப்படி இருக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

படத்தின் பெயர் Pagglait.

கணவனின் மரணத்திலிருந்து படம் துவங்குகிறது. மரணத்தை பதிவிட்டதில் 250க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்திருப்பதாக சந்தோஷப்படும் மனநிலையில் இருக்கிறாள் மனைவி. குடும்பமே கண்ணீர் விட்டு துயருற்றிருக்க இறந்தவனின் மனைவிக்கோ பெப்சியும் சிப்ஸ்ஸும் கிடைக்காதா என ஏக்கம். இறந்தவனின் மனைவிதான் நாயகி.

கணவனின் மரணத்தால் துயருறாத மனைவி. நிச்சயம் கணவனிடம் ஏதேனும் பிரச்சினை இருக்க வேண்டும். இருக்கிறது.

மரணத் தகவல் கிடைத்து பெண்ணின் பெற்றோர் வருகின்றனர். தோழி வருகிறாள். அலுவலக நண்பர்கள் வருகிறார்கள். உறவுகள் வருகின்றன. காரியம் நடக்கும் வரை நாயகிக்கு ஏற்படும் அனுபவங்களும் அவை கொடுக்கும் மாற்றமும்தான் கதை.

வாரணாசியில் இருக்கும் பார்ப்பன குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் நாயகி. எனவே பார்ப்பன குடும்பம் பெண் மீது செலுத்தும் நுண்ணிய ஆதிக்கத்தில் நாயகி கட்டப்பட்டிருக்கிறாள். ஒருசேர நவீனத்துக்கும் பழமைக்கும் என ஊசலாடும் ஒரு அசல் நவபார்ப்பன குடும்பமாக படத்தில் வரும் குடும்பம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. குடும்பத்தின் தலைவராக இருக்கும் மாமனாரின் பொருளாதார இயலாமை அதன் நியாயத்துடன் காட்டப்பட்டிருப்பது ஆசுவாசம்.

காதல், உறவுகள் என சமூகத்தின் எந்த கட்டத்திலும் பெண்ணை எப்படி குடும்பம் என்கிற அமைப்பு சடங்கு, மூட நம்பிக்கை, மதம் முதலிய விஷயங்களை கொண்டு கட்டுக்குள் கொண்டு வருகிறது என்பதும் அந்த கட்டுப்பாடும் பொருளாதார ஆதாயத்தைக் (உழைப்புச் சுரண்டலாக கூட இருக்கலாம்) கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்பதும் பிரசாரமற்ற காட்சிகளாக அழகாய் விரிகின்றன.

உறவு, குடும்பம், மதம் என தொடங்கி எல்லா தளைகளையும் தகர்த்துவிட்டு வெளியே வந்து பெண் அடைகிற விடுதலையில் பொருளாதார இயலாமை மற்றும் பிற கட்டுப்பெட்டித்தனங்களில் சிக்கித் தவிக்கும் ஆணுக்கான விடுதலையும் அடங்கியிருப்பதை உள்ளடக்கமாக படம் கொண்டிருக்கிறது.

OTT தளம் அர்த்த நேர்த்தி கொண்ட பல படங்களுக்கு அற்புதமான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அவ்வகையில் இப்படமும் மசாலாத்தனம் இல்லாமல் செறிவான நிதானமான ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சீரமைவுகளை பிற சாதிகளுக்குள் நேர விடாமல் பார்ப்பன குடும்பங்கள் மட்டும் அவற்றின் அவசியத்தை புரிந்து உடனே பற்றிக் கொள்ளும் தன்மை பெறுவதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இந்திமொழிப் படமான Pagglait நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories