இருளர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராஜாக்கண்ணு என்பவருக்கு போலிஸாரால் நேர்ந்த உண்மையான கொடுமைகள் குறித்தும்,
அவரது மனைவிக்காக மேனாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டது குறித்தும் பேசியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’.
இதில் சந்துருவாக நடிகர் சூர்யாவும், ராசாக்கண்ணுவாக மணிகண்டனும் அவரது மனைவி கதாப்பாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ், விசாரணை அதிகாரியாக பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர். த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருந்தது.
ஜெய் பீம் படம் மக்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றதோடு இருளர் இன மக்களுக்கு நேரும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக தொடர்ந்து கருத்துகள் பகிர்ந்த வண்ணம் உள்ளது.
தொடர்ச்சியான பாராட்டுகளை தொடர்ந்து ஜெய் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்கருக்கு அடுத்தபடியாக சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படுவது கோல்டன் க்ளோப் விருது. அதன் 79வது விருது விழா 2022ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் திரையிடப்படுவதற்காக சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம் படம் தேர்வாகியுள்ளது.
இதனை 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.