சூர்யாவின் நடிப்பில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி சமூகதளங்களில் பரவலான பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.
விருத்தாசலம் வட்டத்தின் முதனை கிராமத்தில் 1993ஆம் ஆண்டுவாக்கில் வாழ்ந்த ராஜாக்கண்ணு என்கிற குரும்பர் இனத்தவரை ஒரு திருட்டு வழக்குக்காக விசாரிக்க அழைத்துச் சென்று காவல்துறை அடித்துக் கொன்றது. அவரது மனைவி பார்வதியிடம் ராஜாக்கண்ணு தப்பிச் சென்றுவிட்டதாக காவலர்கள் பொய் சொல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை ராஜாக்கண்ணுவின் குடும்பம் நாடியது. ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, ஆட்சியர் என பல மனுக்கள் அளிக்கப்பட்டும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சட்டப்போராட்டத்துக்கு நகர்ந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ராஜாக்கண்ணுவுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் வழக்கறிஞராக கே.சந்துரு இணைந்தார். ராஜாக்கண்ணு காணாமல் போனதாக தொடங்கிய வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு நகர்ந்து, ராஜாக்கண்ணு கொல்லப்பட்டது தெரிய வந்தபிறகு, கொலை வழக்காக மாறி, கிட்டத்தட்ட 13 வருடங்கள் வழக்கு நீண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
ராஜாக்கண்ணுவின் வழக்கில் அவரது மனைவி பார்வதிக்கு நீதி பெற்றுத் தர உதவியோரில் முக்கியமானவர் கே.சந்துரு என்றால் களமிறங்கி போராடியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றியது. குறிப்பாக கம்மாபுரத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன், செயற்குழு உறுப்பினர் ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசல மாவட்டச் செயலாளராக அப்போதிருந்த தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர்.
கோவிந்தனுக்கு பல தொல்லைகளும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. லட்சக்கணக்கில் பணம் கூட பேரம் பேசப்பட்டது. எதற்கும் அவர் அசராமல் முழு வழக்கிலும் ராஜாக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்தார். முழு வழக்கும் நடந்து முடிந்து 13 வருடங்களுக்குப் பிறகுதான் திருமணம் கூட செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலம் வட்டத்திலுள்ள முதனை கிராமத்தில் நடந்த மேற்படி சம்பவத்தை தழுவியே ஜெய்பீம் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
கே.சந்துருவாக நடிகர் சூர்யாவும் ராஜாக்கண்ணுவாக மணிகண்டனும் ராஜாக்கண்ணுவின் மனைவியாக லிஜோ மோல் ஜோஸும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணனாக பவா செல்லத்துரையும் அறிவொளி இயக்க ஆசிரியையாக ரஜிஷாவும் பிரகாஷ்ராஜ், காளீஸ்வரன் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருக்கின்றனர். த.செ.ஞானவேல் படத்தை இயக்கியிருக்கிறார்.
அரசியலற்றிருத்தலே சரியான அரசியல் என்றும் தனிமனித சாகசங்கள் அரசியல் தீர்வைக் கொடுத்துவிடும் என்றும் கானல் நீரை பொங்கும் அருவியாக கற்பனை செய்கிற தலைமுறைக்கு சித்தாந்தங்களால் மட்டுமே மக்கள் விடுதலை சாத்தியமென பாடம் எடுத்திருக்கிறது ‘ஜெய்பீம்’.