மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் தான் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சென்னை திரும்பிய ரஜினிகாந்த், குடும்பத்தினருடன் தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர், ரஜினிகாந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ரஜினிகாந்த் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தான் நலமாக இருப்பதாக ஆடியோ ஒன்றை Hoote குரல் வழி செயலியில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா உருவாக்கிய இந்த Hoote ஆப்பை கடந்த 25ஆம் தேதி ரஜினிகாந்த் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதில், "அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன். இன்று இரவுதான் வீட்டுக்கு வந்தேன். நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிகப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் உடல் நலம் குறித்து விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.