பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்ப்பட்ட பரம்பரை படம் அமேசான் ப்ரைம் தளத்தில் அண்மையில் வெளியானது.
குத்துச்சண்டையை கதையின் கருவாக வைத்து 75களின் பிற்பகுதியில் நடைபெறும் திரைக்கதையாக உருவாக்கியிருந்தார் பா.ரஞ்சித். இரண்டு குத்துச்சண்டை குழுக்களிடையே நடைபெறும் பகைமையை சுட்டுவதுதான் படமாக அமைந்திருக்கிறது.
படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவர் மத்தியிலும் வரவேற்பையே பெற்றிருந்தது. ஆனால் படத்தில் வெளிப்படையாகவே 1975ல் நடந்த எமர்ஜென்சி சம்பவம் குறித்து பேசப்பட்டது சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கதையில் கூறப்பட்டவை அனைத்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், சார்ப்பட்ட பரம்பரை படத்தில் Daddy கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் விஜய் திமுகவுக்கு ஆதரவாக பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “உண்மையில் நடந்ததைதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. திமுகவுக்கு அந்த நேரத்தில் என்ன நடந்ததோ அதுதான் படத்துல இருக்கும்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக வேறூன்றி வலுவான கட்சியாகதான் தமிழ்நாட்டில் திமுக உள்ளது. எந்த கட்சி அந்த மாதிரி இருக்கு ? தமிழ்நாடுதான் அது திமுகதான். வேற எதும் யோசிக்க முடியாது. அவங்களுக்குதான் அதப்பத்தி தெரியும். வெளிய இருந்து வரவங்களுக்கு எப்படி நம்மள பத்தி தெரியும். ” எனக் கூறியுள்ளார்.