கொரோனா வைரஸ் பரவலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் முன்னணி நடிகர்கள் உள்ளிட்டோரின் பல்வேறு திரைப்படங்கள் வெளியிட முடியாத சூழலில் சிக்கியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல வகையில் நிதிச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இவற்றை களையும் வகையில் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அவ்வகையில் நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சூரரைப் போற்று’ படமும் அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30ம் தேதி வெளியிடப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு கோலிவுட்டில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் சூர்யாவின் முடிவால் பாதிக்கப்படுவார்கள் என திரைத்துறையினர், பிற தயாரிப்பாளர்கள் கூறி வந்தாலும் சூர்யா தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்காமலேயே இருக்கிறார்.
மேலும், அந்தப் படத்தின் வியாபாரம் மூலம் கிடைக்கும் பங்கில் 5 கோடி ரூபாயை தமிழ் சினிமாவுக்கு அளிப்பதாக சூர்யா வாக்களித்திருந்தார். தற்போது தனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் எதையும் கருத்தில் கொள்ளாமல் முதற்கட்டமாக ரூ.1.5 கோடியை தமிழ் திரையுலகுக்கு நிதியாக அளித்துள்ளார் நடிகர் சூர்யா.
அதன்படி, இயக்குநர் சங்கத்துக்கு 20 லட்சம் ரூபாயும், பெப்சி அமைப்புக்கு ரூ.80 லட்சமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30 லட்சம் ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 20 லட்சம் ரூபாயும் என 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக நடிகர் சூர்யா அளித்துள்ளார்.
இதற்கான காசோலைகளை நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவக்குமார் அந்தந்த சங்கங்களின் செயலாளர், தலைவர், பொதுச்செயலாளரிடம் வழங்கினார். மேலும் எஞ்சிய தொகை விரைவில் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.