கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள தொழில் துறைகளில் சினிமாத் துறையும் ஒன்று. கோடிக்கணக்கில் முதலீடு செய்து படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். இந்தச் சூழலில் நடிகர் கவுதம் மேனன் இந்த ஊரடங்கு காலத்திலும் தளராமல் வீட்டில் இருந்தபடியே இரண்டு படைப்புகளை இயக்கி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இளசுகளிடையே சூப்பர் ஹிட் படமாக இதுகாறும் நிலைத்திருக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை மையமாக வைத்து சிம்பு, த்ரிஷாவை வைத்தே “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார்.
அதேபோல, சாந்தனு, கலை மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் “ஒரு சான்ஸ் குடு” என்ற பாடலையும் இயக்கி வெளியிட்டார். இதற்கு மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அமேசான் ப்ரைம் தளத்துக்காக வெப் சீரிஸை இயக்கவுள்ளார் கவுதம் மேனன்.
அந்த வெப் சீரிஸ் ஊரடங்கு முடிந்த பிறகு தொடங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் கவுதம் மேனனின் வெப் சீரிஸில் இணைந்துள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதில், கொரோனா ஊரடங்கு முடிந்தபிறகு அமேசான் நிறுவனத்துக்காக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள வெப் சீரிஸுக்கு தான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நெடுநாட்களுக்குப் பிறகு பணியாற்றுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அதில் பி.சி.ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணைய சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஊரடங்குக்கு பிறகு சினிமாத் துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறது. இந்த நம்பிக்கையுடனே இருக்க முயற்சிக்கிறேன்” என பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
ஏற்கெனவே பி.சி.ஸ்ரீராமும், கவுதம் மேனனும் தனித்தனியே காதல் படங்களில் சிறப்பாக பணியாற்றியபோதும், தற்போது இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கும் தகவல் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, ஊரடங்கு முடிவடைவதற்காக தாங்களும் ஆவலோடு காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.