சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று. ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் அபர்ணா முரளி, கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல் வெளியீட்டு விழா வித்தியாசமான முறையில் நடுவானில் நடைபெற்றது சூர்யா ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் பெற்றது.
அடுத்தபடியாக, படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, கொரோனா வைரஸ் தாக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கிப் போயிருக்கிறது.
இதனால், விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ என கடந்த இரண்டு மாதங்களில் வெளியாக வேண்டிய பல படங்கள் வெளியாகாமல் உள்ளன. மே 3 வரை அமலில் உள்ள ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்படலாம் என்பதால் படங்களின் வெளியீடுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள தாக்கம் சீரடைய 2 மாத காலம் ஆகும் என்பதால் சூரரைப் போற்று படக்குழு ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று சூரரைப் போற்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அதிகாராப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ரிலீஸாகவேண்டிய படம் இன்னும் தள்ளிப்போவது அதிருப்தியாக இருந்தாலும், ஏப்ரல் 14 அன்று வெளியான படத்தின் மேக்கிங் வீடியோவும், சூர்யாவின் அர்ப்பணிப்பும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு குறையாததால் தற்போது வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.