'பிகில்' படத்தை முடித்த கையோடு தனது 64வது படத்துக்கு தயாரான நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தை பார்த்தபிறகே அவருடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறார். அதுபோலவே தனது 65வது படத்துக்கும் செய்திருக்கிறார் விஜய்.
'மாஸ்டர்' படத்தின் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அண்மையில் ரிலீஸான ‘குட்டி ஸ்டோரி’ பாடல் ரசிகர்களின் கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஆடியோ ரிலீஸ், டீசர் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு பட்டியல் நீண்டு வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் 65வது படத்தின் இயக்குநர் குறித்த உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் ‘விஜய் 65’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், படத்தின் இயக்குநர் யார் என இதுவரை தெரியாமல் இருந்தது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சுதா கொங்கராவே விஜய்யின் 65 வது படத்தை இயக்குவதாக தெரிய ந்துள்ளது. முன்னதாக, சுதாவின் கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் அவரது முந்தைய படத்தை பார்க்கவேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
அதற்காக, ‘சூரரைப் போற்று’ படத்தை விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார் சுதா. படம் மிகவும் பிடித்துப்போக, சுதா கொங்கராவுடன் பணியாற்ற சம்மதித்திருக்கிறாராம் விஜய். இதனையடுத்து, விஜய், சுதா கொங்கரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் அட்வான்ஸ் கொடுத்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய்யை இயக்கும் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையை சுதா கொங்கரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக , ‘மாஸ்டர்’ படம் ரிலீஸான கையோடு விஜய் 65க்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படம் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ‘விஜய் 65’ ரிலீஸாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.