‘பிகில்’ பட வசூல் தொடர்பாக அண்மையில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அதேபோல, சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் பனையூர், சாலிகிராமம் உள்ளிட்ட வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக, நெய்வேலியில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கே சென்று விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து வந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இறுதியில், விஜய் வீட்டில் இருந்து பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை விளக்கமளித்தது. மாறாக, ஏ.ஜி.எஸ் மற்றும் அன்புச்செழியனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரெய்டு நடந்த அடுத்த நாள் நெய்வேலியில் தன்னைச் சந்திக்கத் திரண்ட ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
இதற்கிடையே, விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலா வந்தன. அதில் ஒன்றாக, நடிகர் விஜய், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் பணியாளர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்யும் பணியை ஜேப்பியார் கல்விக்குழும உரிமையாளரின் மகள் ரெஜினாவுடன் இணைந்து செய்து வருகிறார் என்றும்,
அதன் மூலம், வரும் நன்கொடைகளையே பிகில் படத்துக்கு செலவு செய்துள்ளதாகவும், இதனை பா.ஜ.கவின் உள்துறை அமைச்சகமும், வருமான வரித்துறையும் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், இதுவரை விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ்கண்ணா, ஆர்த்தி போன்ற சினிமா நட்சத்திரங்கள் விஜய் மற்றும் ஜேப்பியார் மகளின் வற்புறுத்தலின் மூலம் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.
இந்நிலையில், இந்த வதந்தி தொடர்பான பதிவைக் கண்டு கடுப்பான நடிகர் விஜய் சேதுபதி, “போய் வேற வேலை இருந்தா பாருங்கடா...” என ஆவேசம் பொங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தற்போது இணையத்தில் சூடான விவாதத்தை கிளப்பியதோடு, பலர் விஜய் சேதுபதிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.