‘பிகில்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘மாஸ்டர்’. இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், நாயகியாக மாளவிகா மோகனனும் நடிக்கின்றனர். இவர்கள்போக, சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷன், ஸ்ரீமன், விஜே ரம்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
எக்ஸ்.பி.ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரமும் முடிவடைந்திருப்பது கோலிவுட்டில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக போஸ்டர் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது சன் நெட்வொர்க்.
கோடை விடுமுறைக்கு ‘மாஸ்டர்’ படம் ரிலீஸாக இருப்பதையொட்டி படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் தமிழகத்தின் விநியோகஸ்தர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஆனால், விஜய்யின் பிகில் படத்தை விட 15 கோடிக்கும் குறைவாக மாஸ்டர் படத்தின் வியாபாரம் 66 கோடிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தயாரிப்பாளருக்கு மட்டும் லாபம் எடுத்துக்கொள்ளாமல் அதில் விநியோகஸ்தர்களின் பங்கு இருக்கவேண்டும் என்பதற்காக லலித் குமார் இவ்வாறு செய்துள்ளார்.
இதனையறிந்த நடிகர் விஜய், லலித் குமாரை பாராட்டியுள்ளார். அதேபோல விநியோகஸ்தர்களும் லலித் குமாரையும், மாஸ்டர் படக்குழுவினரையும் மனதாரப் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். விஜய்யின் ‘பிகில்’ படம் தமிழகத்தில் 81 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.