இறைவனின் படைப்பில் நீல ஆடை போர்த்தி வரும் வானமும் அழுகு! பனிக்குடம் சுமந்து நிற்கும் பச்சை புல்வெளியும் அழகு!மனக்கும் பூக்களை மறக்கடிக்கச் செய்யும் தென்றலும் அழகு!குளிரும்போது சுட்டெரிக்கும் சூரியனின் கதகதப்பும் அழகு! மழை நேரத்தில் மலையிடுக்கே பொழியும் அருவியும் அழகு! இவை அனைத்தையும் தாண்டி அன்றலர்ந்த தாமரை முகம் கொண்ட பெண்மை பேரழகு..!
அழகெனும் சொல் பெண்ணுக்கே உரியதான ஒன்றாக இருந்து வருகையில் அந்த பெண்ணே பொறாமைப்படும் பேரழகியாக 1973ல் இன்றைய தினத்தில் (நவ.1) பிறந்து, 1994ல் உலக அழகி பட்டத்தையும் வென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்த நிரந்தர உலகழகிதான் கவிஞர்கள் பலரால் வர்ணிக்கப்பட்ட “50 Kg தாஜ்மகால்” ஐஸ்வர்யா ராய்.
முன்னாள் உலக அழகி எனும் வார்த்தை இவருக்கு மட்டும் இங்கு பொய்யாகிறது காரணம் இவர் இன்றும் பலகோடி மனங்களில் உலக அழகிதான். இவர் இந்தப் பட்டத்தை வென்று 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று மட்டுமல்ல என்றும் இவர்தான் இந்தியர்களுக்கு உலக அழகி. 1994ம் ஆண்டுக்குப் பிறகான பெண்கள் நிச்சயம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது “நீ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா” எனும் கேள்வியை கடந்திருப்பார்கள். அந்த ஆண்டில் இவர் உலக அழகி பட்டம் மட்டும் பெறவில்லை ‘மிஸ் கேட்வாக்’, ‘மிஸ் போட்டோஜெனிக்’, ‘மிஸ் மிராக்குலர்’, ‘மிஸ் பெர்ஃபெக்ட்’, ‘மிஸ் பாப்புலர்’ என ஐந்து முக்கிய பட்டங்களை தனதாக்கினார்.
பின்னர் 1997ல் சினிமாவிற்குள் என்ட்ரியான இவர் மணிரத்தினத்தின் ‘இருவர்’ படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமிருந்தாலும் பாலிவுட் இவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கவே, அங்கு தன் கவனத்தை செலுத்தினார்.
அழகோடு சேர்ந்த அறிவும் திறமையும் ஐஸ்வர்யா ராயை சினிமா துறையில் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமா துறையில் ஒரு பெண் நிலைத்து நிற்க பெரும் ஆளுமையும் கூடுதலான ரசிகர்கள் படையும் அவசியம். அது ஐஸ்வர்யா ராய்க்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்திருந்தது.
சினிமா பயணங்களுக்கு நடுவே அபிஷேக் பச்சனுடன் இணைந்து குடும்ப வாழ்க்கையிலும் பயணம் செய்யத் துவங்கிய இவருக்கு ஆரத்யா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு விழா மேடையில் மீடியா முன் வந்து நின்ற ஐஸ்வர்யா ராயை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி” எனும் வரிகளை பொய்யாக்கி வந்திருந்தார்.
இதனால் ஐஸ்வர்யா ராய் மீது ஏராளமான கேலிகளும் சீரியஸான விமர்சனங்களும் தாக்கின. முடிந்தது ஐஸ்வர்யா ராயின் சினிமா பயணம், இப்படி ஒரு ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என ஊடகங்கள் செய்திகள் வெளியிடத் தொடங்கின.
இந்த விமர்சனங்களுக்கு மற்றவர்களைப் போல் பேசாமல் இருந்துவிடவில்லை அவர். “விமர்சனங்கள் என்பது கடலில் விழும் ஒரு துளி நீர், நான் என் தாய்மையை முழுமையாக அனுபவித்தேன், ஒரு குழந்தையின் தாயாக என் வாழ்க்கையை ரசித்தேன், என் எடை கூடுவது பற்றிக் கவலைப்பட எனக்கு நேரமில்லை” என கம்பீரமாக கூறினார்.
பிறகு 2 வருடங்கள் கழித்து 2015ஆம் ஆண்டு ‘ஜஸ்பா’ எனும் பாலிவுட் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவரை இகழ்ந்து கேலி செய்த ஊடகங்களுக்கு நினைவிற்கு வந்திருக்கும் “இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி” எனும் அதே பாடலின் அடுத்த வரிகள். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திரைத்துறைக்கு வந்த இவருக்கு வரவேற்பில் எந்த பஞ்சமும் இல்லை. ‘சர்ப்ஜித்’, ‘ஏ தில் ஹே முஷ்கில்’ என பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்தன. ஆனால் குழந்தை மற்றும் குடும்பத்தின் மீதுள்ள காதலின் காரணமாக மீண்டும் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
உலகில் அனைவருக்கும் 7 அதிசயங்கள் இருந்தபோது இந்தியர்களுக்கு மட்டும் 8வது அதிசயமாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா ராய். “வாய் பேசும் பூவாக, வான்மிதக்கும் கண்கள், தேன் தெறிக்கும் கன்னங்கள், பால் குடிக்கும் அதரங்கள்” என இவரின் அழகை பாடல் வரிகளில் அழகாக வர்ணித்து சொல்லியிருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது 46வது பிறந்தநாளில் இன்றுபோல் என்றும் இதே அழகோடும் வலிமையோடும் வாழ வாழ்த்துவோம்.