90’s kids கொண்டாடித் தீர்த்த படமான 'காதலர் தினம்' வெளியாகி இன்றோடு 20 வருடங்களாகிறது. ஒரு தலைமுறையே கடந்த பிறகும் இன்றும் தனக்கான நினைவுகளைக் கொண்டிருக்கிறது 'காதலர் தினம்'.
இப்போது அமர்ந்து இந்தப் படத்தைப் பார்த்தால் அவ்வளவாக உங்களை ஈர்க்காது. ஆனால் ரஹ்மானின் நாஸ்டால்ஜிக் பாடல்கள், இன்டர்நெட்டின் தொடக்க காலத்தை புரிந்துகொள்ளுதல், வர்க்கரீதியில் பெரிய வித்தியாசமுடைய காதலர்கள் என தொண்ணூறுகளின் இளைஞர்கள் கொண்டாட எல்லா அம்சங்களையும் படம் கொண்டிருந்தது.
உண்மையில் இயக்குநர் கதிர் தன் எல்லா படங்களிலும் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களுக்கு இணையான படக்குழுவை கொண்டிருப்பார். உதாரணமாக இந்தப் படத்தின் தயாரிப்பு ஏ.எம்.ரத்னம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம், எடிட்டிங் - லெனின் மற்றும் விஜயன். எடுத்த படங்களும் மெஹா ஹிட் அடித்தவை. இருந்தும் தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெறாதவர் கதிர். காரணம் கதிர் இருந்த ட்ரெண்டை பயன்படுத்தினாரே தவிர, புதிய ட்ரெண்டை உருவாக்கத் தவறியவர். இந்தப் படமும் அப்படித்தான்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிய க்ரெடிட் ரஹ்மானுக்கு கொடுக்கலாம். இயக்குநர் கதிரின் முதல் படமான 'இதயம்' தவிர மற்ற அனைத்து தமிழ் படங்களுக்கும் ரஹ்மான் இசைதான். ஒரு பாடல்கூட மிஸ் ஆகாமல் எல்லா ஆல்பங்களும் சொல்லி அடித்தன. காதலர் தினத்தில் கூட மொத்தமுள்ள ஆறு பாடல்களுமே பெரும்பாலான இசை ரசிகர்களுக்கு ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும். இதற்கெல்லாம் கைமாறாக ரஹ்மானுக்கு கதிர் செய்தது என்ன?
ரஹ்மான் எத்தனையோ இயக்குநர்களுக்கு ஹிட் இசை கொடுத்திருக்கிறார். ஆனால் இயக்குநர் மணிரத்னத்திற்கு இணையாக கதிர் தான் அவர் பாடல்களுக்கு நியாயம் செய்திருப்பார். ரஹ்மான் தந்த பாடல்களுக்கு, கதிர் தரும் விஷூவல் ட்ரீட்மென்ட் பாடல்களை இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கொண்டாட வைக்கும்.
90-களின் இறுதி என்பது இந்தியாவில் இன்டர்நெட்டின் தொடக்க காலம். அதைவைத்து உருவாக்கப்பட்ட கவுண்டமணியின் காமெடி டிராக், கவுண்டமணிக்கே புதிய அடையாளத்தைத் தந்தது. குணால், சோனாலி பந்த்ரே, சின்னி ஜெயந்த், நாசர் என பலரும் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பார்கள்.
ஆனாலும் நான் குறிப்பிட்டுக்கூற விரும்புவது மணிவண்ணனை. மணிவண்ணன் தான் நடிக்கும் படங்களில் தன் கதாப்பாத்திரத்திற்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிவிடுவார். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நாம் வெளிப்படுத்த நினைக்கும் உணர்வுகளை, திரைக்குள்ளிருந்து மணிவண்ணன் வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்.
ஐ லவ் யூ ரோஜா
ஐ லவ் யூ ராஜா
இந்த சாதாரண வசனம் தான் தமிழ் இளைஞர்கள் மனதில் ஒரு அசாதாரண காதலை விதைத்தது. இன்னும் பல தலைமுறைக்கு இந்த உணர்வு இந்தப் படம் மூலமாகக் கடத்தப்படும்.