நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கடந்த 2014-ல் வெளியான படம் கோச்சடையான். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் விநியோக உரிமைத்தை பெங்களூருவைச் சேர்ந்த ஆர்ட் பிரோ அட்வர்டைசிங் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதற்காக அந்நிறுவனத்திடம் இருந்து ரூ.14.9 கோடி கடனாக பெற்றுவிட்டு படத்தின் விநியோக உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார் லதா ரஜினிகாந்த். பின்னர் பெங்களூரு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.8.7 கோடியை மட்டும் தொகையாகும் மீதி ரூ.6.7 கோடியை ஆவணங்களாகவும் லதா வழங்கியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த அட்வர்டைசிங் நிறுவனம், 2015ம் ஆண்டு பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தது. பின்னர், இந்த வழக்கை எதிர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் முறையிட்டதை தொடர்ந்து அட்வர்டைசிங் நிறுவனத்தின் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து 2018ல் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது நிறுவனம். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு அல்சூர் கேட் போலீசாருக்கு உத்தரவிட்டும், ரூ.6.2 கோடியை வழங்குமாறும் லதாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கு பின்னர் அல்சூர் கேட் காவல்துறையினர் லதா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மே 6ம் தேதி அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அவகாசம் கேட்டதால் வருகிற 20ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகுமாறு லதாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.