அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மாடல் தான் கிம் கர்தாஷியன். இவர் தற்போது ரியாலிட்டி ஷோவின் ஒரு ஸ்டாராக இருந்து வருகிறார். தனது அழகால் லட்சக்கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ள இவர், ஏராளமான பெண் ரசிகைகளையும் கொண்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஜெனிஃபர் பாம்பலோனா என்ற 29 வயதுடைய இளம்பெண் ஒருவர், கிம் கர்தாஷியனை போன்று இருக்க வேண்டும் என்று தனது முகத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
தனது 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர், இதுவரை காஸ்மெட்டிக், உதடு, கண்கள், மூக்கு என 40 சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சையானது 4 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் தான் அறுவை சிகிச்சையில் அடிமையானதாக உணர்ந்த ஜெனிஃபர், மீண்டும் தனது பழைய முகத்தை கொண்டு வர எண்ணியுள்ளார். அதன்படி இஸ்தான்புலில் உள்ள ஒரு மருத்துவரை அணுகி, 95 லட்சம் ரூபாய் செலவு செய்து மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ஜெனிஃபர் கூறுகையில், "பலரும் என்னை அமெரிக்கா மாடல் கிம் கர்தாஷியனை போல இருப்பதாகவே கூறுவார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நான் படித்து, பணியாற்றி தற்போது ஒரு நல்ல தொழிலதிபராக இருக்கிறேன்.
இருப்பினும் என்னுடைய உடலமைப்பு கர்தாஷியனை போலவே இருந்ததாலே மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட்டேன். அது எனது அடையாளமாகவே ஆனது. எனவே அவரை போல் முழுவதுமாக தோற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.
நான் தற்போது அறுவை சிகிச்சைக்கு அடிமையானது மட்டுமல்லாமல், நான் மகிழ்ச்சியாகவும் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன். எனவே மீண்டும் எனது பழைய தோற்றத்திற்கு மாறவுள்ளேன்" என்றார். மேலும் தற்போது தான் , காஸ்மெடிக் சர்ஜரி எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் ஆவணப்படத்தில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.