உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா போரைத் தொடங்கியது.
ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யாவில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரின் வெளிப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் முகாமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், கார்கிவ் நகருக்குள் ரஷ்ய படையினர் நேற்று நுழைந்தனர். இவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டனர். கார்கிவ் நகர சாலைகளில் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
கார்கிவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள எரிவாயு குழாயை ரஷ்ய படையினர் குண்டு வைத்து தகர்த்தனர். கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் உயிரிழந்து இருக்கலாம் என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கார்கிவ்வை விட்டு வெளியேற ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு முழு வச்சில் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், இந்திய மாணவர் குண்டுவீச்சில் உயிரிழந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.