இஸ்ரேலின் கில்போவா சிறையில் பாலஸ்தீனர்கள் உட்பட தீவிரவாதிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிலேயே இந்தச் சிறை மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆறு கைதிகள் கழிவறையில் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ள சம்பவம் சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறையிலிருந்த சிசிடிவி காட்சியை வைத்து இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது 'Shawshank Redemption' ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளன. இந்தச் சம்பவத்தை பாலஸ்தீனர்கள் சமூக வலைத்தளங்களில் ஹீரோக்களை போலக் கொண்டாடி எழுதி வருகிறார்கள்.
காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தாக்குதல் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.