அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பிடனின் ஜனநாயக கட்சி 238 இடங்களிலும், ட்ரம்பின் குடியரசு கட்சி 213 இடங்களிலும் முன்னணி வகிக்கிறது.
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்.பிரைட் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் வழக்கறிஞர். இவர் டெலாவேரில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார்.
மொத்தமாக பதிவான வாக்குகளில் ராஜா கிருஷ்ணமூர்த்தி 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ராஜாவின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.