இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் இதுவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதே போல, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 66,139 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக இன்னும் போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘உலகின் சிறந்த ஊடக புகைப்பட’ விருதை இறந்த குழந்தையின் உடலை தாங்கிப் பிடிக்கும் பாலஸ்தீனப் பெண்ணின் புகைப்படம் வென்றிருக்கிறது.
World Press Photo Foundation என்ற அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த ஊடக புகைப்படங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் முகமது சலேம் இந்த விருதை வென்றுள்ளார்.
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கிய உடன் அக்டோபர் 2023 ஆம் ஆண்டு புகைப்படங்களை எடுப்பதற்காக தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவர் இறந்த தனது குழந்தையை கட்டியணைத்தபடி இருந்ததை பார்த்து புகைப்படம் எடுத்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகுதான் இஸ்ரேல் -பாலஸ்தீனம் போரின் கொடூர முகம் உலகம் அறிந்தது.
இந்த போரில் 99 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டும் உலகின் சிறந்த ஊடக புகைப்பட விருதை முகமது சலேம் வென்றுள்ளார். ”இந்த புகைப்படத்தை எடுக்கும்போது தன்னை ஆழமாக பாதித்தாக” முகமது சலேம் கூறியுள்ளார்.