ஆந்திரா மாநிலம், பார்வதி புரத்தில் உள்ள ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாப்பையா என்பவர் பணியிலிருந்தார். அப்போது அந்த வழியாக மின் ஊழியர் உமா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
இவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவரை போக்குவரத்து காவலர் பாப்பையா நிறுத்தியுள்ளார். பின்னர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் அவருக்கு ரூ.135 அபராதம் விதித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உமா, "நான் யார் தெரியுமா? எனக்கே அபராதம் போடுறீங்களா?" என வாக்குவாதம் செய்தார். இருப்பினும் காவலர் அபராத ரசீதை அவரிடம் வழங்கினார். இதனால் மேலும் கோபமடைந்த உமா பார்வதி புரத்தில் உள்ள காவல் உதவி மையத்திற்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது அவர் காவல் நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். "நீங்கள் போக்குவரத்து விதிப்படி நடந்து கொள்ளாததால் நாங்கள் அபராதம் விதித்தோம். எங்கள் மீது தவறு எதுவும் இல்லை" என போலிஸார் கூறினர்.
இதைக்கேட்ட அவர் உடனே காவல்நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். பின்ன இதுபற்றி அறிந்து அங்கு வந்த மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் மின் இணைப்பைச் சரி செய்தனர். ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதித்த ஆத்திரத்தில் காவல் நிலையத்திற்கான மின் இணைப்பை மின் ஊழியர் துண்டித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.