"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்"" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டிய பட்டமிது!) தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அவர் நடத்திடும் அரைவேக்காட்டு அரசியல் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பா.ஜ.க தலைவர்களை கண்டிக்க தவறிய ஒன்றிய அரசை, மக்கள் அனைவரும் சாடிக் கொண்டிருக்கையில், தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனம், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக கூறி கருத்துச் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரத்தில், பெரிய அரசியல் மேதையைப் போலக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலைக்கு தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும், இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும், தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் செம்மார்ந்த சரித்திரத்தின் சாட்சியாய் இருக்கும் ஆற்றலாளர் முன்னாள் அமைச்சரும், எனது தந்தையுமான ஆற்காட்டார் பற்றி அண்ணாமலை பேசி இருக்கிறார். ஆற்காட்டார் பெயராவது அவருக்கு தெரிந்துள்ளதே என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. இவரெல்லாம் மேடையில் பேசுவது அபத்தம். அதை விட அபத்தம் என்னவென்றால் அவருக்கு மேடையளிப்பது தான்!
தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்தார் எங்கள் ஆருயிர் ஆற்காட்டார். எங்கள் இயக்க தலைவர்களை குறித்து எப்போதும் உளறும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று என் தந்தை பற்றி தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார். இன்றும் பலருக்கு நன்மை செய்து கொண்டு இருக்கிறார் .
நாகரீகமற்ற முறையில் உளறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்வினை இது போன்று சாதாரணமாக இருக்காது என்று எச்சரிக்கிறேன்...!” எனத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தனது குருவின் பாணியான மன்னிப்பு என்னும் கருவியை கையில் எடுத்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் அந்த அரை வேக்காட்டுத் தலைவர்.