சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தற்போது ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் பணி அதிகரித்து வருகிறது. அதில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாகவும் பலர் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாக ஆண்களே இது போன்ற டெலிவரி பணிகளில் பெரும்பாலும் ஈடுபடுவர்.
தற்போது பெண்களும் உணவு டெலிவரி செய்யும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகே உள்ள சாலை அருகே உணவு டெலிவரி செய்யும் பெண் ஒருவர் குழந்தையுடன் TVS மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடினமான பணிகளில் பெண்கள் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தாலும் இந்த புகைப்படம் நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது குழந்தையுடன் சென்று கொளுத்தும் வெயிலில் உணவு டெலிவரி செய்யும் பெண்ணுக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், உண்மையான சிங்கப்பெண் என்றும் அந்த பெண்மணிக்கு பாராட்டுத் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், கஷ்டப்படும் பெண்கள் உணவு டெலிவரி போன்ற பணிகளுக்கு வரும் போது அவர்களது குழந்தைகளுக்கான பாதுகாப்பகங்களை உணவு டெலிவரி நிறுவனங்களே வைக்கலாம் என்றும் கருத்தும் தெரிவித்தும் உள்ளனர்.
இந்நிலையில், நெட்டிசன்களை கருத்தை ஏற்று, உணவு டெலிவரி செய்யும் வள்ளி (37)க்கு ஊபர் ஈட்ஸ் சார்பாக தலைக்கவசம் பரிசாக வழங்கப்பட்டது. இதுவும் சமூக வலைதளத்தில் வைரலானது.
மேலும், தன்னுடைய பணி தொடர்பாக ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வள்ளி, “ குடும்ப சூழ்நிலையின் காரணமாக இந்த உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டாலும் இதன் மூலம் என் குழந்தைக்கு இந்த உலகையே சுற்றிக்காட்டுவதாக நினைக்கிறேன்” என உணர்ச்சிப்பொங்க பேசியுள்ளார். அவரது கள்ளம்கபடமற்ற பேச்சு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.