மகாராஷ்டிராவில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனிடையே ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற அணை உடைந்தது.
இதனால் அருகில் உள்ள 7 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தார். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பத்திற்கு அணையை முறையாக பராமரிக்காததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். ஆனால் இதுகுறித்து பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தனஜீ சவந்த், அணையின் உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம். ரத்னகிரியில் உள்ள அணைக்கட்டினை நண்டுகள் அரித்து பலவீனப்படுத்தி விட்டதாகவும் அதனால் ணை பலவீனமடைந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு பொறுப்பற்ற பேச்சாக இருக்கிறது என பலரும் குற்றம்சாட்டிவந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் ஜிதேந்திர அவ்கட் தலைமையிலான தொண்டர்கள் இணைந்து கோலாப்பூரில் உள்ள காவல் நிலையத்துக்கு நண்டுகளுடன் சென்றுள்ளார்கள்.
அணைக்கட்டு உடைந்ததற்கு நண்டுகள் அரித்ததுதான் காரணம் என மாநில நீர்வளத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டி தாங்கள் கொண்டு வந்த நண்டுகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவற்றை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என புகார் மனு அளித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை அதிகாரிகள் செய்வது அறியாது திகைத்துள்ளனர். காவல் நிலையத்துக்குள் நண்டுகளோடு சென்று அவற்றை சிறையில் அடைக்க வேண்டும் என புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.