நாடு முழுவதும் மக்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே பெரும் சிரமத்தை அடைகின்றனர். விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ரேசன் பொருட்கள் கிடைக்காமல் முதியவர் உயிரிழப்பு, மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி தாக்குதல், சாதிய படுகொலை, இதில் கந்து வட்டிக் கொடுமை வேறு. இந்த கந்துவட்டிக் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்னை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள பெண் கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் கொடிகேஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரின் பெயர் ராஜாமணி. 36 வயதுடைய இந்தப் பெண் உணவகம் மற்றும் சீட்டுக் கம்பெனியும் நடத்தி வந்துள்ளார்.
ராஜாமணி அந்த ஊரில் உள்ள ஒருவரிடம் 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை செலுத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் கடன் அளித்தவர்கள் ஆத்திரம் அடைந்து அந்தப் பெண்னை அடித்து இழுத்து வந்து அந்த பகுதியில் உள்ள தொருவோரம் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும் 2 மணிநேரமாக கட்டிவைத்து அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி செருப்பாலும், துடைப்பத்தாலும் அந்த பெண்ணைக் கொடூரமாக தாக்கியுள்ளனர். அங்கு கூடியிருந்த மக்கள் யாரும் அடிப்பவர்களை தடுக்கவில்லை. அங்கு இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து பலர் கண்டனம் எழுப்பியுள்ளனர். இதனிடையே தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கந்து வட்டிக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வாங்கிய கடனுக்காக பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.