தமிழ்நாடு

”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“2 லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படிக்க வைத்து - புதிய சிந்தனையாளர்களை உருவாக்கி இருக்கிறதுகலைஞர் 100 வினாடி வினா போட்டி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று (23-11-2024) கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, “கலைஞர் 100 – வினாடி-வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

தமிழ்ச் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும் - தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் வினா எழுப்பியவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். வினா எழுப்பியதோடு இல்லாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி – தமிழ்ச் சமுதாயத்திற்கான விடியலாகவும் - முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

எனவே, தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, “எங்கே திராவிடப் பட்டாளம்?” என்று கேட்பவர்களுக்கு – “இதோ இங்கே!” என்று அடையாளம் காட்டியிருக்கிறார் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்கள்!

‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார். தலைவர் கலைஞரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில் இருந்துதான் கணக்கிடப்பட வேண்டும்” என்று சொல்வார். அப்படி, நிறைந்த பிறகும், தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

தலைவர் கலைஞர் அவர்கள் கட்சி எல்லைகளைக் கடந்து - அரசியல் எல்லைகளைத் தாண்டி – இன்றைக்கும் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவராக – இந்தியாவின் அரசியல் அடையாளமாக – நிர்வாகத் திறமையின் இலக்கணமாக அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்! அதை வெளிக்காட்டும் விதமாக – இந்தப் போட்டியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றக் குழுத் தலைவர் – என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்!

பாசத்தைப் பொழியும்போது, கனிமொழியாகவும் – தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது, கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி அவர்கள். நீங்கள் அனைவரும் கனிமொழி அவர்களுடைய நாடாளுமன்றப் பேச்சுகளைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்... திராவிட இயக்கத்தின் கொள்கையை – சமூகநீதி வரலாற்றை – சுயமரியாதை சமதர்ம உணர்வுகளோடு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகம் காக்க இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாகச் செயல்பட்டு வருபவர்தான் நம்முடைய தங்கை கனிமொழி அவர்கள்.

மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நிகழ்ச்சிக்குப் பெரும்பங்கு அளித்திருக்கிறார். உண்மைதான், கனிமொழியே இங்கு சொன்னார். நிதித்துறை அமைச்சர் என்கிற காரணத்தாலோ என்னவோ, பெரும்பங்கு அவருக்கு எப்போதும் உண்டு! அதேபோல, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக அருமையாக இங்கே தொகுத்து வழங்கிய அருமைச் சகோதரர் கோவி.லெனின் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

இவ்வளவு பெரிய போட்டியைத் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது சாதாரண செயல் அல்ல... எப்படி இந்தப் போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்தினீர்கள் என்று தங்கை கனிமொழியிடம் நேற்று முன்தினம் கேட்டேன்... அவருடைய பதில் என்னை மலைக்க வைத்தது... உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை உருவாக்க 15 பேர் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழு 250 புத்தகங்களை ஆய்வு செய்து, திராவிட இயக்கத்தின் வரலாறு – தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – ஆகியோரின் வாழ்வு – தொண்டு – நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் – மக்கள்நலத் திட்டங்கள் என்று 40 ஆயிரம் கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்கள்... உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் கேள்விகளைக் கேட்டதைவிட, உங்களைப் படிக்க வைத்ததுதான் உள்ளபடியே பாராட்டுக்குரியது! இதுதான் இந்தக் ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டியின் மிகப்பெரிய வெற்றி! மிகப்பெரிய சிறப்பு என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு நவம்பரில்தான் இந்தப் போட்டி நிறைவடைந்திருக்கிறது... சுமார் 14 மாத காலம் தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்கத்தின் வரலாறு இளம்தலைமுறையிடம் விதைக்கபட்டிருக்கிறது! இந்தப் போட்டியின் கேள்விகளுக்கு பதில் தேடி, நீங்கள் தயாரானபோது, பழைய வரலாற்றைப் படித்திருப்பீர்கள். அதன்மூலம் புது சிந்தனைகள் உங்களுக்கு உருவாகியிருக்கும். இந்தச் சிந்தனைகள்தான் இந்த இயக்கத்தை தொடர்ந்து வழிநடத்தும்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்தப் போட்டியின் வெற்றி என்பது, புது சிந்தனையாளர்களை உருவாக்குவதுதான்! இரண்டு லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தைப் பற்றிப் படிக்க வைத்ததன் மூலமாக, இந்தப் போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது!

18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபிலன், உதயகுமார், நரேஷ்குமார்; இரண்டாவது பரிசு பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலன், சோஃபியா, மோகன்ராஜ்; மூன்றாவது பரிசு பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், தியாகராஜன், மாதவி நாகமுத்து; நான்காவது பரிசு பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், லட்சுமி, தீரமகாராஜன்; அதேபோல், பதினெட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் பரிசு பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு, சித்தி ஃபர்விஷா, தர்ஷினி; இரண்டாம் பரிசு பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் தங்கேஷ், அஜித்குமார், ஷேக் அமீன்; மூன்றாம் பரிசு பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சனா, ராஜஸ்ரீ, ஸ்ரீநதியா; நான்காம் பரிசு பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா, வெண்ணிலா, வேல்முருகன் – என வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உங்களுடைய வெற்றி சாதாரண வெற்றி அல்ல. 2 லட்சம் பேரில் இருந்து நீங்கள் வென்றிருக்கிறீர்கள். திராவிட இயக்கம் 100 ஆண்டுகளைக் கடந்த இயக்கம். இதன் வரலாற்றை முழுமையாக அறிந்து - தெளிந்து – புரிந்து, அதை மனதில் பதிய வைத்திருப்பவர்களில் ஒருவராக உங்களை நீங்களும் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது நீங்கள் அனைவருமே ‘Dravidian Encyclopedia’!

உங்களில் சிலர் பேட்டி கொடுத்ததைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் வெறுமனே வார்த்தைகளால் புகழாமல், தி.மு.க செய்த சாதனைகளால் புகழ்ந்தது, எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுத்தது.

சில நாட்களுக்கு முன்னர், இதே கலைஞர் அரங்கில் தம்பி உதயநிதி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ இறுதிப் பேச்சுப் போட்டிக்கு 182 பேர் கூடினார்கள். அதில் இருந்து மூவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த 182 பேரும் இப்போது தமிழ்நாட்டு மேடைகளில் முழங்கும் பேச்சுப் போராளிகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது திராவிடக் களஞ்சியமாக நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தக் காட்சிதான் என்னை மட்டுமல்ல, இந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரையும் இன்றைக்குப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாராட்டும் வகையில் அந்தப் பணியை நீங்கள் இன்றைக்குத் தொடங்கி இருக்கிறீர்கள். இது போன்ற நிகழ்ச்சிகள்தான் எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் தருகிறது!

முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசு 6 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு 3 லட்சம் ரூபாயும், நான்காம் பரிசு 1 லட்சம் ரூபாயும், வெற்றியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... உங்களைப் போலவே பலரையும் உருவாக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது வாட்ஸ்அப் யுகம்! வாட்ஸ் அப்-இல், யாரோ ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.

அருமைச் சகோதரி கனிமொழிக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... வேண்டுகோள் அல்ல, உரிமையோடு சொல்கிறேன்... இதுபோன்ற கருத்துகளை விதைக்கும் களப்பணியைத் நீங்கள் தொடர வேண்டும்.

பேசிப் பேசி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். அப்படிப் பேச்சாளர்களை – எழுத்தாளர்களை இளந்தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும். புதிய புதிய செய்திகளை – புதிய புதிய கோணத்தில் சொல்ல வேண்டும். சொல் புதிது – சுவை புதிது – பொருள் புதிது – என்ற வகையில சொல்ல வேண்டும். மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைக்கூட மிகச் சுவையாக - மக்கள் மனதில் பதியும் வகையில் சொல்ல வேண்டும். நம்முடைய கொள்கை வீரர்களின் பேச்சு நறுக்கென்று இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஒருவரின் பேச்சு, மூளையை தொட வேண்டும்! அதன் மூலமாக, அவர்கள் மனதை ரீச் செய்ய வேண்டும்! அப்படி நீங்கள் அனைவரும் கருத்து சொல்லும் ஸ்டைல்-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

போட்டியில் கலந்துகொண்ட நிறையபேர் இங்கு இருக்கிறீர்கள்! நான் இப்போது சில கேள்விகளை உங்களிடம் கேட்கப்போகிறேன். பதில் தெரிந்தவர்கள் உட்கார்ந்தே சத்தமாகச் சொல்லுங்கள் போதும்! லெனின்தான் உங்களிடம் கேள்வி கேட்டார். இப்போது ஸ்டாலின் கேட்கப் போகிறார். முதல் கேள்வி எளிமையானது – ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னது யார்? (தந்தை பெரியார்). இரண்டாவது கேள்வி - பேரறிஞர் அண்ணா அவர்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் டாக்டரிடம், “நான் படிக்கும் புத்தகத்தை, நாளை படித்து முடித்துவிடுவேன், அதன்பிறகு அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அது என்ன புத்தகம்? (மேரி கரோலி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன்). மூன்றாவது கேள்வி – தந்தை பெரியார் “எனது பகுத்தறிவு சமூகசீர்திருத்தப் பணியின் முன்னோடி” என்று யாரைச் சொன்னார்? (அயோத்திதாசப் பண்டிதர்).

இவை சாதாரண கேள்விகள்தான். இதுபோன்று அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், தியாக வரலாற்றை – நம்முடைய இயக்கத்தின் வரலாற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய பணி அமைந்திட வேண்டும். அதற்கு இதுபோன்ற வினாடி-வினா நிகழ்ச்சிகள் நிச்சயமாகப் பயன்படும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்து, இதை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து, நடத்திக்காட்டி, அதில் வெற்றி கண்டிருக்கும் நம்முடைய தங்கை கனிமொழி அவர்களுக்கும், அவருக்கு துணைநின்ற மகளிரணிக்கும், அனைவருக்கும் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வான நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories