தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் போக்குவரத்துத்துறை சாதனைகள் !
* 2,578 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக கொள்முதல்!
* ரூ.9,143.70 கோடி அரசு செலவில் இதுவரை 570.86 கோடி முறை மகளிர் கட்டணமில்லாப் பயணம் !
* ரூ.5,238.11 கோடி அரசு செலவில் மாணவ, மாணவிகள் கட்டணமில்லாப் பயணம் !
* 3,959 ஓட்டுநர் உடன் நடத்துநர் மற்றும் 537 தொழில்நுட்பப் பணியிடங்கள் புதிதாக நியமனம்!
* 7,997 பணியாளர்களுக்கு ரூ.2026 கோடி ஓய்வுகாலப் பயன்கள்!
* தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு விருதுகள் வழங்கி ஒன்றிய அரசு பாராட்டு !
1967-இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் தமிழக சட்டப்பேரவையில் 20.3.1967 அன்று அளித்த 1967-1968ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், போக்குவரத்துத் துறையில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பேருந்து தடங்களை, அவை காலாவதி ஆகஆக அரசு நாட்டுடைமையாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்படி, போக்குவரத்துறை அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞைர் அவர்கள் 75 மைல்களுக்கு மேலான 96 தடங்கள்; அவற்றில் 124 பேருந்துகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கினார்கள்.
=> முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய போக்குவரத்துக் கழகங்கள் :
முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் முதன்முதலில் சென்னை - ஆரணி தடத்தில் 1967-ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் அன்று நாட்டுடைமை ஆக்கப்பட்ட முதல் பயணத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேருந்துகளைச் சிறப்பான முறையில் மக்களுக்குப் பயன்படச் செய்யும் வகையில் 1.1.1972 முதல் பல்லவன் போக்குவரத்துக் கழகம், பின்னர் சோழன் போக்குவரத்துக் கழகம், பாண்டியன் போக்குவரத்துக் கழகம், சேரன் போக்குவரத்துக் கழகம் முதலான பல போக்குவரத்துக் கழகங்களைத் தொடங்கினார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கினார். பேருந்து போக்குவரத்துறைகளில் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலம் எனும் புகழ் எங்கும் பரவியது.
=> போக்குவரத்துத் துறையில் திராவிட நாயகர் ஆட்சியில் புரட்சிகரமான திட்டம் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-இல் பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் புரட்சிகரமான பல திட்டங்களைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் முதன்மையான திட்டம் - முதன்முதல் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் “மகளிர் விடியல் பயணத் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் புரட்சிகரமான விடியல் பயணத் திட்டம் மகளிரின் வாழ்வில் விளக்கேற்றும் திட்டம் என்று அனைவராலும் பாராட்டப்படுகிற திட்டம் ஆகும்.
=> திட்டக் குழு ஆய்வு முடிவு :
தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு, திருப்பூர் (தொழில்), மதுரை (வர்த்தகம்) மற்றும் நாகப்பட்டினம் (வேளாண்மை) ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திரச் செலவில் சுமார் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தில் 31.10.2024 வரையில் 570.86 கோடி பயண நடைகள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஒரு நாளில் 57.07 இலட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர்.
புதிய பேருந்து வழித்தடங்கள் அறிமுகம் மற்றும் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடங்கள் மீண்டும் இயக்கம்
399 புதிய வழித்தடங்களில், 725 பேருந்துகள் புதிய வழித்தடங்களிலும் நீட்டிக்கப்பட்ட / வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. 519 வழித்தடங்களில், நிறுத்தப்பட்ட பேருந்துகள் 638 பேருந்துகள் மூலம் மீண்டும் இயக்கப்படுகின்றன.
=> மெட்ரோ இரயில் நிலைய இணைப்புப் பேருந்து :
மெட்ரோ இரயில் பயணிகள் விரைவாகப் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 56 இணைப்புச் சிற்றுந்துகள், சென்னையில் 30 மெட்ரோ இரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
=> 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-க்குப் பிறகு 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதில், 31.10.2024 வரை 2,578 புதிய பேருந்துகள் வரப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
=> பழைய பேருந்துகளைப் புதுப்பித்தல் :
2022-2023 ஆம் நிதியாண்டில் 1,000 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூ.130 கோடியும், 2023-2024ஆம் நிதியாண்டில் 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூ.76.34 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மொத்தம் 1,500 பேருந்துகளில் 31.10.2024 வரை 1,310 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு; மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது; எஞ்சிய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
=> மகளிர் பாதுகாப்பான பயணத்திற்குப் புதிய முயற்சிகள் :
அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய கண்காணிப்புக் கேமரா, இருக்கைகளில் அவசர அழைப்புப் பொத்தான் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 2,500 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன. தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
=> பெண்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கீடு :
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதற்கு வசதியாக பெண்களுக்கெனத் தனியே 4 இருக்கைகள் ஒதுக்கப்பட்டு 8.5.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
=> பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முன்பதிவு செய்வதற்கான புதிய செயலி :
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https:www.tnstc.in மூலமும், TNSTC செயலியின் மூலமும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் பொதுமக்களின் வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாளொன்றிற்குச் சராசரியாக 18,195 பயணச்சீட்டுகள் OTRS மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. 200 கி.மீ. தொலைவு மற்றும் அதற்கு மேல் இயங்கும் அனைத்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இருக்கைகளையும் OTRS இணையதளத்தில் முன்பதிவு செய்யும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
=> அரசுப் பேருந்து பயணிகளுக்கு ஊக்கப் பரிசுத் திட்டம் :
வார நாள்களில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய OTRS மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், “அதிர்ஷ்டசாலி பயணிகளை” ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.10,000 பரிசும், அடுத்த 10 பயணிகளுக்கு ரூ.2,000 பரிசுத் தொகையும் மொத்தமாக ரூ.50,000 பரிசு வழங்கப்படுகிறது. இது பயணிகள் இடையே போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நீண்ட தூரப் பயணத்திற்கு முன்பதிவு செய்யயும் முறையை ஊக்குவிக்கிறது.
=> தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் விவரம் அறிய பொது இணையதள வசதி :
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் நேரம், சேவைகள், பேருந்து கட்டண விவரங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பொது இணையதளம் (Arasu Bus) பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
=> புவிசார் தொழில் நுட்பம் மூலம் (GPS) வாகனங்களின் நகர்வுகளை அறிய உதவும் பயணிகள் தகவல் பலகை :
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் (JICA) சென்னை நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், வாகன நகர்வைக் கண்காணித்தல், பணிமனை மேலாண்மை, பயணிகளுக்கான தகவல் அமைப்பு ஆகியவற்றைச் செயல்படுத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் (System Integrator) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநகர் போக்குவரத்துக் கழகம், பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில், கோ-ஆப்டெக்ஸ், சிம்சன், ஸ்டெர்லிங் ரோடு, பெரியார் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, எழும்பூர் இரயில் நிலையம், பல்லவன் சாலை, பிராட்வே ஆகிய 8 பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் தகவல் பலகை நிறுவப்பட்டுள்ளது.
=> இ-சேவை மையம் மூலம் பயணக் கட்டணச் சலுகைச் சீட்டு :
மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் முதலிய பயணக் கட்டணச் சலுகை பெறுபவர்கள், உரிய பயணக் கட்டணச் சலுகை சீட்டுகளைப் பெறுவதற்கு (100% இலவசம், 75%, 50% மூன்றில் ஒரு பங்கு, இலவசம் இல்லை (Free Token) போன்றவை) அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பயணச்சீட்டு வழங்கும் இடங்களுக்குச் சென்று வாங்கிச் செல்கின்றனர். இதனைத் தவிர்க்க அரசு இ-சேவை மையம் வாயிலாக இணையதளப் பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாட்டுமுறை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
=> பொதுமக்களுக்குப் பேருந்துப் பயணச்சலுகை திட்டங்கள் :
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகைப் பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விழா நாள்கள் நீங்கலாக இதர நாள்களில், இணையவழிப் பயணச்சீட்டு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக்v கழகப் பேருந்துகளில் ஒரு காலண்டர் மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்குச் சிறப்புச் சலுகையாக அம்மாதத்தில் அடுத்த தொடர் பயணங்களுக்கு, அதாவது ஆறாவது பயணம் முதல், 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
=> வரவேற்பைப் பெற்றுள்ள நவக்கிரக சிறப்புப் பேருந்து :
கும்பகோணம் மாநகரைச் சுற்றி அமைந்துள்ள நவகிரகக் கோயில்களுக்குச் செல்வோர்க்கு காலை 6 மணிக்கு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம் முதல் மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் வரை செல்ல சிறப்புப் பேருந்துக்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றிற்கு ரூ.750 நிர்ணயித்து நவக்கிரகச் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. இது, மக்களிடம் பெற்றுள்ள பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அனைத்து நாள்களிலும் நவகிரகக் கோவில்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு மலைப்பகுதிகளுக்கு கோடைக் காலங்களில் சிறப்புச் சுற்றுலா பேருந்துகள் கட்டணச் சலுகையுடன் இயக்கப்படுகின்றன.
=> காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் :
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆணைகள் பிறப்பித்துள்ள நிலையில், இதுவரை 3,959 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நியமிக்கவும், 537 தொழில்நுட்பப் பணியாளர்களை நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டு, அதில் 684 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நியமிக்கப்பட்டு, மீதம் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
=> ஒன்றிய அரசின் விருதுகள் :
“சென்னை பஸ்” (Chennai Bus App) செயலிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசின் “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்” என்ற விருது வழங்கப்பட்டது.
Whatsapp மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் குறைகளைத்v தீர்வு செய்வதற்கான பொறிமுறைகளை (Mechanism) உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றமைக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிருவாகத்தைப் பாராட்டி, 2022ஆம் ஆண்டு Urban Infra Group Publication மூலம் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுடெல்லியில் வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விபத்தில்லாமல் பணிபுரிந்த மொத்தம் 42 ஓட்டுநர்களுக்கு ஒன்றிய அரசு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும் 14 ஓட்டுநர்களுக்கு (மொத்த விருதுகளில் 33.33 சதவிகிதம்) Heroes on the Road என்ற விருதுகள் வழங்கப்பட்டன.
2022-2023ஆம் ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்துv செயல்திறன்களுக்கான சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு 17 விருதுகளை வழங்கியுள்ளது.
இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றுள்ளது. மொத்தமாக இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட விருதுகளில் 25 சதவிகித விருதுகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளன.
முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.
=> பணியாளர் நலன் :
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தில் பே மேட்ரிக்ஸ் பொருத்தி, 5 சதவிகிதம் உயர்வு, 14வது ஊதிய ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டது. பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்பநல நிதி ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண கட்டணப் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
=> ஓய்வு பெற்ற பணியாளர்களுக்குப் பணப்பலன்கள் :
மே-2020 முதல் மார்ச்-2023 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 7,997 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.2,026.07 கோடி வழங்கப்பட்டது.
=> கருணை அடிப்படையில் நியமனம் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியின்போது இறந்த பணியாளர்களின் 766 வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 113 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநருடன் நடத்துநர், 636 நடத்துநர்கள், 1 நிருவாகப் பணியாளர், 16 தொழிநுட்பப் பணியாளர்கள் அடங்குவர்.
=> முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு – சிறப்புப் பணிகள் :
முத்தமிறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 275 மருத்துவ முகாம்கள் மூலம் 29,911 பேர்களும் 19 இரத்த தான முகாம்கள் மூலம் 1,361 பேரும் பங்கேற்றனர். 104 இடங்களில் மன அழுத்த நிவாரணப் பயிற்சிகளின் மூலம் 2,02,257 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயன்பெற்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 25 ஆண்டுகளாக விபத்தில்லாமல் பேருந்துகள் இயக்கிய 20 ஓட்டுநர்களுக்குத் தங்க நாணயமும், 10 ஆண்டுகளாக விபத்தில்லாமல் பேருந்துகள் இயக்கிய 1,069 ஓட்டுநர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவை அனைத்துப் பிரிவு மக்களாலும் பாராட்டப்படுகிறது. அரசுப் பேருந்து போக்குவரத்துகளில் தமிழ்நாடு போக்குவரத்து இந்திய அளவில் சிறந்த போக்குவரத்து நிறுவனமாகப் பாராட்டப்பட்டு, தேசிய அளவில் போக்குவரத்துகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளைத் தமிழ்நாடு பெற்றுள்ளதே சிறந்த சான்றாகும்.