தமிழ்நாடு

கலைஞரின் கனவு இல்லம் - 1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் : முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகள்!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் -  1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் : முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரிடையாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் வரை முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயனாளிகள் பயனைடயும் வகையில், குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டைகள் TANCEM நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.48 கோடி செலவினம் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று, இரும்பு கம்பிகள் (Steel) நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி ஒப்பந்த புள்ளி இறுதி செய்து உரிய விற்பனையாளரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகள் அனைத்தும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் ஏற்கனவே, ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதால், இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம்

2000-01-ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்நிதியாண்டில் ஒரு இலட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப சிறு மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுநாள்வரை 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசால் ஏற்கனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியாண்டிற்குள் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் பழுதுநீக்கப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II 2024-25

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் - II ன் கீழ் 2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களையும் முழுமையான வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், பிற திட்டங்களுடன் ஒருங்கிணைத்து படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் - II ன் கீழ், கிராம ஊராட்சியில் தேவைப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குளங்கள் / ஊருணிகள் புனரமைத்தல், பொது பயன்பாட்டு கட்டடங்களான கிராம ஊராட்சி அலுவலக கட்டடம், பொது விநியோகக்கடை மற்றும் அதற்கான கூடுதல் வசதிகள், அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், சமத்துவ சுடுகாடு /இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், குக்கிராமங்களில் தெருக்கள் / வீதிகள் மேம்படுத்துதல். தெருவிளக்குகள், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளான சந்தைகள் / கிராம விற்பனை கூடங்கள் / மீன் சந்தைகள் / சேமிப்பு கிடங்கு, கதிரடிக்கும் களம் / மீன் உலர்த்தும் முற்றம் போன்ற 53,779 பணிகள் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 2,482 கிராம ஊராட்சிகள் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள், முடிக்கப்பட்டுள்ளன. நாளதுவரை, அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்கப்பட்டு ஒற்றை சாளர வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் நேரடியாக தங்கு தடையின்றி ஒப்பந்ததாரர்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II -ன் கீழ் அனைத்து பணிகளும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

மேற்குறிப்பிட்டவாறு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கனவே, பெறப்பட்ட ரூ.300 கோடியுடன் தற்போது ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிகளுக்காக ஏற்கனவே ரூ.150 கோடி அரசால் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.450 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.347.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகள் முழுவீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories