தமிழ்நாடு

இதயம் வரை பரவிய அரியவகை புற்றுநோய் : மருத்துவத்துறையில் புதிய மைல்கல் - அரசு மருத்துவமனை சாதனை !

இதயம் வரை பரவி இருந்த அரியவகை விதைப்பை புற்றுநோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை அளித்து ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இதயம் வரை பரவிய அரியவகை புற்றுநோய் : மருத்துவத்துறையில் புதிய மைல்கல் - அரசு மருத்துவமனை சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ வசதி தமிழ்நாட்டில்தான் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பலரும் தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புற்றுநோய், எய்ட்ஸ், கண்தானம், உடல் உறுப்பு தானம், இரத்த தானம், தாய் பால் தானம், உள்ளிட்ட பலவற்றுக்கும் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மேலும் புற்றுநோயை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க புதிய கருவிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் சிறப்பாக முறை செய்து வருகிறது.

அதாவது சென்னையில் அமைந்திருக்கும் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு சரி செய்து வருகிறார்கள். இந்த மூன்றுக்கும் தனித்தனி துறைகள் உள்ளது. மேலும் இந்தியாவில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் அதிநவீன இயந்திர மனிதவியல் (Robotic) அறுவை சிகிச்சை மையம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.

இதயம் வரை பரவிய அரியவகை புற்றுநோய் : மருத்துவத்துறையில் புதிய மைல்கல் - அரசு மருத்துவமனை சாதனை !

இந்த சிகிச்சைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ஒரு நபருக்கே லட்சக்கணக்கான செலவுகள் ஏற்படும். ஆனால் இதனை அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே, இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு சிகிச்சை பெற்று வரும் பலரும் குணமாகி நலமுடன் வீடு திரும்புகின்றனர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, புற்றுநோயை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

பீகாரை சேர்ந்தவர் சிவம் (28). புலம்பெயர்ந்த தொழிலாளியான இவர், சென்னை, தியாகராய நகரில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு அண்மையில் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வலது விதைப்பையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அங்கே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால், மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கே அவருக்கு Advanced பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருடைய விதைப்பை புற்றுநோய், விதைப்பையில் இருந்து இதயத்திற்கு செல்லும் தமனியில் பரவி இதயம் வரை பரவியிருந்தது கண்டறியப்பட்டது.

இதயம் வரை பரவிய அரியவகை புற்றுநோய் : மருத்துவத்துறையில் புதிய மைல்கல் - அரசு மருத்துவமனை சாதனை !

இதையடுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் தலைமையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் சர்மா, வாஸ்குலர் சர்ஜன் கிருஷ்ணா, மயக்க மருந்து நிபுணர் தீப்தி உள்ளிட்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், இளைஞர் சிவமின் தொடர்ந்து 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு விதைப்பையுடன் தமனி முழுவதும் பரவியிருந்த 25 செ.மீ அளவிலான புற்றுநோய் அகற்றப்பட்டு செயற்கை தமனி பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் சுமார் 3 வாரம் வரை பாதிக்கப்பட்ட இளைஞர் சிவமை தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் இதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் கூறுகையில், "இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானது.. இந்த அறுவை சிகிச்சையானது இதயத்தை நிறுத்தி வைத்த பிறகே மேற்கொள்ளப்படும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யாமல், முறையாக திட்டமிட்டு மேற்கொண்டோம். தற்போது சிவம் பூரண குணமடைந்துள்ளார். அவரை 3 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனைக்காக வர சொல்லி அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்.

இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.25 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்த திட்டம் மூலம் அதிகம் பயன்பெற்ற மருத்துவமனைகளில் ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய் துறை முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories