நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.
சிறுபான்மையினர் நலன் மீது அக்கரை கொண்டு பள்ளிவாசல், தர்கா, அடக்கதலம் ஆகியவற்றிற்கு மராமத்து பணிகளை செய்ய சிறப்பு நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர். இதன்படி புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு ரூ.2 கோடியை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மராமத்து பணிகள் நடந்து வருகிறது.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளது ஏற்புடையது இல்லை. அப்படி என்றால் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய ஏன்? குழு அமைக்கப்பட்டுள்ளது.
எதையும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுவது வழக்கமாகி விட்டது. எதற்கு எடுத்தாலும் சம்மந்தமே இல்லாமல் பேசுவதால் தான் பா.ஜ.கவின் தொடர்பை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக துண்டித்து இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.